ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கட்சித் தலைவர்களின் மாநாட்டில் எட்டப்பட்ட தீர்தமானத்தை தொடர்ந்து அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் ஜூலை மாதம் 18 மற்றும் 019 ஆம் திகதிகளில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கத் தயார் என மக்கள் விடுதலை முன்னணியிடம் தெரிவிக்கப்பட்டது. எனினும் அவர்களது உறுப்பினர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளமையால் ஜூலை மாதம் முதலாம் வாரத்தை கோரினர். எனவே, எதிர்வரும் ஜூலை 9 மற்றும் 10ஆம் திகதிகளில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்து வாக்கெடுக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். #ஐக்கியதேசியக் கட்சி #ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சி #லக்ஷ்மன்கிரியெல்ல #மக்கள்விடுதலைமுன்னணி #UNP #SLFP #JVP