Home இலங்கை தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..

தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..

by admin


இலங்கையில் புத்த பிக்குகளின் செல்வாக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைக் குழிதோண்டி புதைக்கும் நிலையினை உருவாக்கியுள்ளது என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பசிக்கு சகோதர முஸ்லிம் மக்கள் இரையாகிவரும் இந்த தருணத்தில் தமிழ் மக்கள் அவர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆரத்தழுவுவதாகவும் அவர்களின் துயரத்தில் பங்குகொள்வதாகவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களைப் பல தசாப்தங்களாக பலிகொண்டுவரும் சிங்கள பேரினவாதத்தின் பார்வை தற்போது முஸ்லிம் மக்களின் மீது திரும்பியிருக்கும் இந்த வேளையில், தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கைகோர்த்து, இணைந்த வடக்கு கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காகப் பாடுபடவேண்டியதன் அவசியத்தை, நடைபெறுவரும் நிகழ்வுகள் காட்டுவதாகவும் அத்தகைய ஒரு கட்டமைப்பு மட்டுமே இரண்டு சமூகங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்றும் நேற்று (04.06.19) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களின் அரசியல், பொருளாதார பலத்தை இலக்குவைத்து பௌத்த பேரினவாதம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் பேராபத்தை உணர்ந்துகொண்டு வெவ்வேறு கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையை வெளிப்படுத்தி இருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் இதனை வெகுவாகப் பாராட்டுவதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரித்து தேவையெனில் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் குற்றம் செய்யாதவர்களையும் பெரும்பான்மையினம் தண்டிக்க விழைவது எந்த விதத்திலும் மன்னிக்க முடியாதது என்றும் அவர் தம் அறிக்கையில் கூறியுள்ளார்.

ஜனாதிபதியையும் பிரதமரையும் பௌத்த பிக்குகள் வற்புறுத்தி குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முஸ்லிம் அமைச்சர் மற்றும் ஆளுநர்களை நீக்கும் அளவுக்கு அரசியலில் பௌத்த சங்கத்தின் செல்வாக்கு வளர்ந்துவிட்டது என குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன், பாதிக்கப்பட்ட எமது உறவுகளின் உண்ணாவிரதங்கள், கோரிக்கைகள் எவையும் இதுவரையில் தொடர்ந்து வந்த அரசாங்கங்களினால் கணக்கில் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

புத்த பிக்குமாரின் செல்வாக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைக் குழிதோண்டி புதைக்கும் பேராபத்தான ஒரு நிலைமையினை தோற்றுவித்துள்ளதுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தம் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து தமது நிரபராதி தன்மையை பாதுகாப்பதற்கான உரிமை மறுக்கப்பட்டு பதிலாக மதவாதம் ஊக்குவிக்கப்பட்டுள்ளமை எதிர்காலத்தில் ஏற்படப்போகும் அழிவுகளை பறைசாற்றி நிற்கின்றது என்றும் விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  #சட்டம் #ஒழுங்கு #விக்னேஸ்வரன் #சிங்களபேரினவாதம் #முஸ்லிம்மக்கள்

Spread the love

Related News

1 comment

Logeswaran June 5, 2019 - 11:35 am

“முஸ்லிம் மக்களின் அரசியல், பொருளாதார பலத்தை இலக்குவைத்து பௌத்த பேரினவாதம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் பேராபத்தை உணர்ந்துகொண்டு வெவ்வேறு கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையை வெளிப்படுத்தி இருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் இதனை வெகுவாகப் பாராட்டுவதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்”.

முஸ்லிம் தலைவர்கள் ஓன்றுபட்டது போல தமிழ்த் தலைவர்களும் ஓன்றுபட வேண்டும். இதை அடைய விக்னேஸ்வரன் முயற்சிகளை எடுக்க வேண்டும். செய்வாரா?

“தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கைகோர்த்து, இணைந்த வடக்கு கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காகப் பாடுபடவேண்டியதன் அவசியத்தை, நடைபெறுவரும் நிகழ்வுகள் காட்டுவதாகவும் அத்தகைய ஒரு கட்டமைப்பு மட்டுமே இரண்டு சமூகங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்றும் நேற்று (04.06.19) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்”.

அதிகாரக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க அனைத்து தமிழ் தலைவர்கள் குழு, முஸ்லிம் தலைவர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும். இதை விக்னேஸ்வரன் முன்னின்று நடத்துவாரா?

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More