உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு குறுகிய நேர பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை செல்கிறார். இந்த பயணத்தின்போது இந்திய பிரதமர் மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நாளை பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இரண்டாவது தடவையாகவும் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, இன்று சனிக்கிழமை மாலைதீவு சென்று, நாளை ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து இந்தியா திரும்பும் வழியில் கொழும்பில் தரித்துச் செல்லவிருக்கிறார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்றே இந்தியப் பிரதமர் இலங்கை செல்கின்றார். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் -,மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியினர், ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல தரப்பினருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தவுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவங்கள், தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள்,அரசியல் தீர்வு விவகாரம், அரசியல் கைதிகள் விடயம், காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், ஐ.நா. தீர்மானம் மற்றும் இலங்கை – இந்திய விவகாரங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை செள்டையும் இந்திய பிரதமர் மோடியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அல்லது அமைச்சர் சஜித் பிரேமதாச வரவேற்கவுள்ளனர்.
தொடர்ந்து இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி செயலகத்தில் பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அங்கு அவருக்கு மதியபோசன விருந்துபசாரம் ஜனாதிபதியினால் வழங்கப்படவுள்ளது. அத்துடன் இருவருக்கும் இடையில் இருதரப்பு சந்திப்பும் அங்கு நடைபெறும். அதன்போது அண்மையில் இடம்பெற்ற குண்டுதாக்குதல்கள் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்படவுள்ளது. இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொள்ளவுள்ளார்.
அதனையடுத்து இந்திய தூதரகத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசுவார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடான சந்திப்பும் இரண்டு மணியளவில் இந்திய தூதகரத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேச்சு நடத்தப்படவுள்ளது.
இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், அரசியல் தீர்வு விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்படவுள்ளது. இந்திய பிரதமர் மோடி இந்த பயணத்தின்போது ஜனாதிபதி செயலகத்திலும் இந்திய தூதகரத்தில் மட்டுமே சந்திப்புக்களை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டின் பின்னர் மூன்றாவது தடவையாக இந்திய பிரதமர் மோடி இலங்கை செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
#இந்தியப்பிரதமர் #நரேந்திரமோடி #மைத்திரிபாலசிறிசேன #ரணில்விக்கிரமசிங்க #மகிந்தராஜபக்ஸ, #சம்பந்தன்