பாகிஸ்தான் மக்கள் எதிர்வரும் 30ம் திகதிக்குள் தங்களின் சொத்து விவரங்களை வெளியிடவேண்டும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ளதனால் சர்வதேச நிதியம் வழங்குவதாக தெரிவித்த 600 கோடி டொலர் கடனும் பாகிஸ்தானுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் நாட்டின் வரவுசெலவுத்திட்டம் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பிரதமர் இம்ரான்கான் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டை சிறப்பான நாடாக மாற்ற விரும்பினால் முதலில் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அந்தவகையில் சொத்து கணக்கு வெளியிடும் திட்டத்தில் பங்கேற்கும்படி அனைவரையும் தான் கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் மக்கள் வரிகட்டவில்லை எனில் நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச்செல்ல முடியாது என்பதனால் நாட்டு மக்கள் அனைவரும் எதிர்வரும் 30ம் திகதிக்குள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வங்கியில் வைத்துள்ள பணம், பினாமி பெயர்களில் உள்ள சொத்துகள், வெளிநாட்டு வங்கிகளில் வைத்துள்ள பணம் என அனைத்தையும் தெரிவிக்க வேண்டும் எனவும் ஜூன் 30ம் திகதிக்குள் இவ்வாறு தெரிவிக்காதவர்கள் கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
# சொத்து விவரங்களை ,#பாகிஸ்தான் #இம்ரான்கான்