2019 ஏப்ரல் 21 ஆம்திகதி இலங்கையில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, கலந்துரையாடுவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
விசேட தெரிவுக்குழுவின் நேற்றைய அமர்வு, பாரா ளுமன்ற குழு அறையில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது, ஜனாதிபதியை சந்திப்பதற்காக, விசேட தெரிவுக்குழுவின் உறுப்பினரூடாக முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில், மூடிய அறைக்குள் விரிவாக ஆராயப்பட்டது. அதன்போதே, கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
விசேட தெரிவுக்குழு தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு தாங்கள் தயாரில்லையென, அது தங்களுடைய தனிப்பட்ட கருத்தாகுமென, அக்குழுவின் உறுப்பினர். பேராசிரியர் ஜயம்பதி விக்ரமரத்னவும் மற்றும் வைத்தியர் நளீந்த ஜயதிஸ்ஸவும் தெரிவித்துள்ளனர்.
“அவ்வாறு சந்தித்து பேசுவதற்கான தேவையிருந்திருக்குமாயின், விசேட தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டத்துக்கு முன்னர், குழு உறுப்பினர்களை அழைத்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம்” என வைத்தியர். நளீந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி தொடர்பிலான காரணங்கள் கலந்துரையாடப்படும் இந்த தருணத்தில், இது நெறிமுறையல்ல” என்றும் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சபாநாயகர் கருஜயசூரிய, இந் விவகாரம் தொடர்பில் தீர்மானமொன்றை அறிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக, நியமிக்கப்பட்ட குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் வேறு தரப்பினருடன் கலந்துரையாடுவது பிரயோசனமற்றது எனத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவை கலைக்குமாறு கடுமையாக எச்சரித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவ்வாறு செய்யாவிடின், அமைச்சரவையில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்திருந்தார். அதற்கமைவாக, நேற்றைய அமைச்சரவைக் கூட்டமும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #பாராளுமன்றவிசேடதெரிவுக்குழு #ஜயம்பதிவிக்ரமரத்ன #மைத்திரிபாலசிறிசேன