கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று இடம்பெறவுள்ளது. திருவிழாத் திருப்பலி ஆராதனைகள் இன்று காலை பத்து மணிக்கு தமிழ் – சிங்கள மொழிகளில் இடம்பெறும். கொழும்பு அதிமேற்றிராணியார் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்வுள்ளது. இதேவேளை கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் நேற்று மாலை அதிமேற்றிராணியார் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் அபிஷேகம் செய்து திறந்து வைக்கப்பட்டது. புனிதத்தின் அடையாளமாக திருத்தலத்தின் உட்புறச் சுவர்களில் பேராயர் திருச்சிலுவை அடையாளம் வரைந்து அபிஷேகம் செய்யும் சடங்கும் இடம்பெற்றது.
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பின்னர், தேவாலயம் புனரமைப்புச் செய்யப்பட்டு, பக்தர்களின் வழிபாட்டிற்காக நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அங்கு உரையாற்றிய அதி மேற்றிராணியார் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பயங்கரவாதத்தை அனுமதித்த எவருக்கும் ஆன்மீக நிவாரணம் கிடையாதென தெரிவித்துள்ளார். சமாதானத்திற்காகவும், நியாயத்திற்காகவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென அவர் குறிப்பிட்டார். தேவாலயத்தை புனரமைப்பதற்கு ஆதரவு வழங்கிய அனைத்துத் தரப்புக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். #கொழும்பு #கொச்சிக்கடைபுனிதஅந்தோனியார்தேவாலயம் #திருப்பலிஆராதனைகள் #கார்டினல்மெல்கம்ரஞ்சித்ஆண்டகை
(அரசாங்க தகவல் திணைக்களம்)