பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை கடலில் கொட்டும் நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாமிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதேவேளை உலகின் பல நாடுகளையும் உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை அதிகளவில் சமுத்திரத்தில் கொட்டும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடம் வகிக்கின்றது.
பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை உரிய முறையில் நிலப்பகுதியிலேயே அகற்றாது, ஆறுகள் வழியாக அவற்றை கடலில் சேர்ப்பதனாலேயே, இலங்கையில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோரப்பகுதி மற்றும் சமுத்திர சூழல் ஆகியன பெருமளவில் பாதிக்கப்படுவதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த நிலை காரணமாக, கடற்பிராந்தியங்களின் காற்று மற்றும் அதனுடன் கூடிய மழை கொண்ட வானிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என அதிகார சபையின் பொதுமுகாமையாளர் கலாநிதி டேர்னி பிரதீப் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் சுற்றுலா, கைத்தொழில் மற்றும் மீன்பிடித் தொழிலுக்கு என்பனவற்றுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் 2050ஆம் ஆண்டளவில், சமுத்திரத்தில் மீன்களை விட பிளாஸ்ட்டிக் பொருட்களே அதிகமாக காணப்படும் என கலாநிதி டேர்னி பிரதீப் தெரிவித்துள்ளார். இதேவேளை, பிளாஸ்டிக் பொருட்களை மீன்கள் உட்கொள்ளும் அபாயமுள்ளதாகவும் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. #பிளாஸ்டிக் #பொலித்தீன் #கழிவுப் பொருட்கள்