தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்வதற்கு அபராதம் விதிப்பதற்கான விதிமுறைகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்ற நிலையில் இது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஜனவரி 1ஆம்திகதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்திருந்தது.
பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பாக அதிகாரிகள் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு பிளாஸ்டிக் பொருட்களைக் கைப்பற்றி வந்தநிலையில், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் அபராதம் வசூலிப்பதற்கான விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதற்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய விதிமுறைகளின்படி, பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர், விற்பனை செய்வோர், சேமித்து வைப்போர், பயன்படுத்தும் சிறு வர்த்தகர்கள், பெரு வர்த்தகர்கள், பொதுமக்கள் என ஆறு பிரிவுகளாகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வர்த்தகர்களைப் பொறுத்தவரையில் முதல் முறை பிடிபட்டால் 25,000 ரூபாவும் இரண்டாவது முறை பிடிபட்டால் 50,000 ரூபாவும் மூன்றாவது முறை பிடிபட்டால் .1 லட்சம் ரூபாவும் அபராதம் வசூலிக்கப்படும் அதேவேளை நான்காவது முறையாகப் பிடிபட்டால் வர்த்தகரின் கடை உரிமம் ரத்து செய்யப்படும்.
பொதுமக்களைப் பொறுத்தவரையில், அதிகாரிகளின் சோதனையின்போது பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால் 500 ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களைச் சேமித்து வைத்திருந்தால் 1,000 ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது
#தமிழகத்தில் #பிளாஸ்டிக் பொருட்கள் #விற்பனை #அபராதம்,