ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கும் இடையில், பிறிதொரு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இணக்கத்திற்கான மத்தியஸ்தர்களாக, அமைச்சர்கள் ராஜித்த சேனாரத்னவும், ரவி கருணாநாயக்கவும் ஈடுபட்டுள்ளார்களெனவும், இதன் பிரதிபலனாகவே, இன்றைய தினம் (18.06.19) அமைச்சரவைக் கூட்டம் இடம் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இணக்கப்பாடு, அரசாங்கத்தை நல்லபடியாகத் தொடர்ந்து நடத்திச் செல்வதற்கு வழிசமைக்குமென, அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் ஒரு கட்டமாகவே, இன்றை அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் காரணமாக, கடந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதி கலந்துகொண்டு இருக்கவில்லை. எவ்வாறாயினும், இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டம், சற்று காரசாரமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் குறித்துக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜனாதிபதி, பின்னர் அந்தத் தீர்மானத்திலிருந்து பின்வாங்கியிருந்தார். அதன்படி, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வும், இன்று பிற்பகல் 2 மணிக்குக் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. #மைத்திரிபாலசிறிசேன #ஐக்கிய தேசியமுன்னணி #ராஜித்தசேனாரத்ன #ரவிகருணாநாயக்க