143
வனவளத்திணைக்களத்தின் காணிகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கை வடக்கு கிழக்கில் பெரிதாக தலைவிரித்தாடுவதாகவும் தமிழ் மக்களின் வீடுகளின் படுக்கை அறைகளில் கூட எல்லைக்கல்லை வைத்து உரிமை கொண்டாடும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபன திருத்த சட்ட மூல விவாதம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணி மீட்டல் என்பது யாரிடமிருந்து யார் காணியை மீட்பது என்ற கேள்வியை வடக்கு கிழக்கு பகுதியை மையமாகக்கொண்டு கேட்க வேண்டியுள்ளதாகவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
வடக்கு கிழக்கில் மக்களுக்கு சொந்தமான காணிகள் பல்வேறு விதமான அதிகாரசபைகளால், திணைக்களங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு காணி மீட்டல் என்பது சர்வதேச புகழ் பெற்ற ஒரு போராட்டமாக பரிணமித்துள்ளதாகவும் கூறினார்.. இரண்டு வருடங்களுக்கு மேலாக, அந்தக் காணிகளுக்கு உரிய ஆவணங்களை மக்கள் வைத்துக்கொண்டு இராணுவத்திடம் இருந்துதமது காணிகளை மீட்க போராடி வருவதாகவும் இது தொடர்பில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதேவேளை, மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகள் மீட்டல் தொடர்பாக கவனத்திற்கு கொண்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் மகாவலி எல் வலய அபிவிருத்தி என்ற போர்வையில் யுத்த காலத்தில் கள்ளத்தனமாக ,கபடத்தனமாக வெளியிடப்படட வர்த்தமானிகள் மூலம் தமிழ் மக்களுக்கு சொந்தமான 1000 ஏக்கருக்கு மேற்பட்ட காணிககள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்.
மக்களின் காணிகளை ,விளைநிலங்களை, மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளை கையகப்படுத்தி மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் காணிகளை மீட்டெடுக்க வேண்டிய போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளதாகவும் இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#வடகிழக்கில் #காணிகள் #பறிக்கப்படுகின்றன #சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா
Spread the love