SOS தினத்தை முன்னிட்டு – கிருஸ்ணகுமார் சிவரஞ்சினி
‘சிறுவயதில் மலரும் பிஞ்சுகளை விழுதுகள் கொண்ட மரமாக்குவோம்’ என்பதற்கு அமைய ஒரு நாட்டின் முதுகெலும்பு சிறுவர்களே! ஆகவே அவர்கள் சமூகத்தில் முக்கியமானவர்கள் என்பது எம்மால் ஒருபோதும் மறுதலிக்க முடியாது. சிறுவர்கள் யார்? அவர்களின் உரிமை என்ன? அவர்கள் சரியாக சமூகத்தில் பாதுகாக்கப்படுகின்றார்களா? என்ற கேள்விக்கு பதிலளிப்பது என்பது கடினமான விடயமாக இருப்பினும் மழலைகளைப் பாதுகாத்து நாட்டிற்கு ஒப்படைக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
சிறுவர்கள் என்போர் தாயின் கருவில் இருந்து பதினெட்டு வயது வரையான காலமாகும். ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட சிறுவர் உரிமைப்பட்டயத்தை இலங்கை 1991ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. சிறுவர்களுக்கென பல்வேறு அடிப்படை உரிமைகள் உள்ளன. அதாவது தன்பெயரையும் தன்இனத்தையும் அடையாளப்படுத்திக் கொள்ள உரிமை, பெற்றோரிடம் இருந்து தனிப்படுத்தப்படாமைக்கான உரிமை, கல்வி உரிமை, வாழ்வதற்கான உரிமை, சமயத்தைப் பின்பற்றும் உரிமை என அடுக்கிக்கொண்டே செல்ல முடியும். இவ்வுரிமைகளை அனுபவிப்பதற்கும் உரிமை உண்டு. மாறாக இவ்வுரிமைகள் சமூகத்தினரால் மறுக்கப்படுமாயின் அது துஸ்பிரயோகத்திற்கு சமனாகும்.
இன்று சிறுவர் உரிமைகள் பறிக்கப்படுவதுடன் சிறார்கள் பல சவால்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அத்துடன் சிறுவர் மற்றவர்களில் தங்கி வாழ்கின்ற பலவீனமானவர்களாக காணப்படுவதனால்;தான் அவர்களின் உரிமைகள் மீறப்படுகின்றன. சிறுவர் துஸ்பிரயோகம் இடம் பெறக்காரணம் சமூகத்திலுள்ள சமூகநிறுவனங்களின் சரியான பங்களிப்பு இன்மையாகும். அந்தவகையில் சிறுவர் உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களை நோக்குவோம்.
சிறுவர்கள் உடல், உள, உணர்வு, புறக்கணிப்பு ரீதியாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். இன்று சில குடும்பங்களில் பெற்றோர்கள் தொழிலுக்கு செல்வதனால் சிறார்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். அதாவது பாலியல் வன்புணர்வு, இழிவான செயலில் ஈடுபடல், ஈடுபடச்செய்தல், தனிமைப்படல், இணையப்பாவனை எனப்பலவற்றைக் கூறமுடியும். குடும்பமே பிள்ளையின் முதல் அத்திவாரம் அதாவது பாதுகாக்க வேண்டியவர்களே சிறுவர்களை படுகுழியில் தள்ளி விடுகின்றனர். வீட்டு வறுமை காரணமாக பிள்ளைகளை தொழிலுக்கு (கல்லுடைத்தல், வியாபாரம், கட்டிட நிர்மாணம்) அனுப்புகின்றனர். அது மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்களே போதைபொருட்களை பாவித்து தமது இச்சை ஆசைகளை சிறுவர்கள் மேல் வெளிப்படுத்துகின்றனர். அதனால் தான் இன்று தந்தை – மகளை துஸ்பிரயோகம், அண்ணன் – தங்கையை துஸ்பிரயோகம் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.
அடுத்து இன்றைய காலத்தில் ஒரு கருவுற்ற தாய் தனது பிள்ளையை அழிப்பதற்கு தடை இருப்பினும் அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றது. அத்துடன் பெற்றபிள்ளையை தெருவில் வீசிச் செல்லது என ஈவிரக்கமற்ற செயல்களும் எமது நாட்டில் நடந்தவண்ணமே உள்ளது. இன்று ஒரு தாய் குழந்தையை பெற்றுவிட்டால் அக்குழந்தைக்கு எவ்வாறு எதிர்காலத்தை காட்டுவேன் என்ற பயஉணர்ச்சி காரணமாக தந்தை, சகோதரன், ஆசிரியர், மதகுரு என அனைவரையும் ஒரு சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலை இன்று தோன்றியுள்ளது. அதாவது ‘வேலியே பயிரை மேய்வதா?’ என்ற கூற்றுக்கு இணங்க மாணவர்களுக்கு கல்வியை வழங்கி நற்பிரஜையாக சமூகத்தில் மிரளச்செய்யும் ஆசிரியர்களே இன்று சிறுவர்களை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகின்றனர். அதாவது மாணவர்களுக்கு பாடசாலையில் வழங்கப்படும் நியாயத்தண்டனைகளை நான் எடுத்துக்கூறவில்லை.
பெற்றோர் கவனிப்பின்றி தெருவோரக் குழந்தைகளாக விடப்படுவதால் திருட்டு, போதைவஸ்து, புகைத்தல் என தவறான பழக்கங்களில் ஈடுபடுகின்றனர். அத்துடன் சமூகத்தில் சில விசமிகளால் சிறுவர்களால் இயலாத விடயங்களை செய்யத்தூண்டுல், துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தல், தெருவோர வியாபாரியாக மாற்றுதல் என சிறுவர்கள் கருக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். இன்று ஒரு நாளைக்கு 07 சிறுவர்கள் நாளாந்தம் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலை மாறவேண்டும் இன்று இன்னொரு பிள்ளைக்கு நடந்த துஸ்பிரயோகம் நாளை என்பிள்ளைக்கு இடம்பெறாதா? என்ற மனநிலையோடு அனைவரும் இம்மழலைச் செல்வங்களை பாதுகாக்க வேண்டும். எவ்வாறு அப்பாதுகாப்பு விடயங்களை மேற்கொள்வதென நோக்குவோம்.
குடும்பங்களின் போதைப்பொருள் பாவனை, பெற்றோர் பிள்ளைகளை ஆதரவற்று விட்டுச் செல்லுதல், பிள்ளைகளை தொழிலுக்கு அனுப்பி அதிலிருந்து பணத்தைப்பெறுதல், பிள்ளைகளை வன்புணர்வு செய்தல், போன்ற விடயங்களுக்கு எதிராக அரசு, அரச நிறுவனங்களும் (சிறுவர் நீதிமன்றம் தேசிய பாதுகாப்பு அதிகார சபை) புதிய சட்டங்களை அமுல்படுத்தி தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதுடன் தண்டனைகளும் பெற்றுக்கொடுக்க வேண்டும். இன்று 90 வீதமான பெண் பிள்ளைகளே துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆகவே பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பாலியல் சம்பந்தமான விடயங்களை விளக்கிச் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.
பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு பிரச்சனைகள் எழவே செய்கின்றன. அதாவது கல்வியறிவுடைய ஆசிரியர்கள் இன்று மாணவர்களிடத்தே மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளுகின்றனர். மேலும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும். மாறாக மாணவர்கள் ஒழுக்கத்தை கடமைகளை மீறும்போது சிறிய தண்டணை எச்சரிப்பு வழங்குவது தவறல்ல. மேலும் ஆசிரியர்கள் இன்றைய சமூக சூழலுக்கு ஏற்ப மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவதுடன் அவர்கள் செல்லும் இடங்களை கண்காணித்து நல்வழிப்படுத்துவோராக காணப்பட வேண்டும்.
அடுத்து 10-14 வயதான சிறுவர்கள் 35,000 பேர் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ தொழிலில் ஈடுபடுத்தப்படுவதைக் காணமுடிகின்றது. ஆகவே இச்சிறார்களை வைத்து தொழில் செய்யும் நபர்களையும், பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்களையும் இணங்கண்டு தண்டணை வழங்குவதுடன் சிறார்களைப் பாதுகாக்க வேண்டும்.
மேலும் சிறுவர்களின் உணர்வுகள், விருப்பங்கள், அபிலாசைகளை சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் உணர்ந்து அதற்கேற்ப நடக்கும்போது சிறுவர் உரிமைகளை பாதுகாக்க முடியும். அத்துடன் சிறுவர் துஸ்பிரயோகத்தை நிறுத்தும் வகையில் ஆர்பாட்டத்தையும், கோசங்களையும் விளம்பரப்படுத்துவதை விட்டு நாம் ஒவ்வொருவரும் எல்லாக் குழந்தைகளையும் நம்குழந்தைகளாக எண்ணி பாதுகாப்போம். #சிறுவர்உரிமைகள் #SOSசிறுவர்கிராமம்
‘இன்றைய முத்துக்கள் நாளைய சிற்பிகள்’
கிருஸ்ணகுமார் சிவரஞ்சினி
SOS சிறுவர் கிராமம்
யாழ்ப்பாணம்