முஸ்லிம் சமூகத்திற்குள் அடிப்படைவாத கொள்கைகளுடன் செயற்படுபவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சமூகத்திற்குள் உள்ள அடிப்படைவாதிகளை அடையாளம் காண்பதற்கான உதவிகளை வழங்க, அந்த மார்க்கத்திலுள்ள சமயத் தலைவர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய தலைவர் ஒருவர், நாட்டிற்கு எதிர்காலத்தில் அத்தியாவசியம் என மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள அரசாங்கம் எதிர்வரும் நான்கு மாத காலத்திற்கு மாத்திரமே இந்த நாட்டில் செயற்படும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான தலைவர் ஒருவரை, தாம் எதிர்வரும் தேர்லில் களமிறக்கவுள்ளதாகவும், அதற்காக காத்திருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசாங்கம் இந்த தாக்குதல் சம்பவத்தை, கீழ் மட்டத்திலுள்ளவர்கள் மீது சுமத்தி, தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்பதை காண முடிகின்றது எனச் சுட்டிக்காட்டிய மகிந்த ராஜபக்ஸ, ஒரு சில முஸ்லிம்களினால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தினால், நாட்டிலுள்ள முழு முஸ்லிம் சமூகத்திற்கும் பாரிய பிரச்சினையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். #முஸ்லிம்சமூகம் #அடிப்படைவாதம் #மஹிந்தராஜபக்ஸ #தேசியபாதுகாப்பு