கடந்த 5ஆண்டுகளில் தவறு செய்த காவல்துறையினருக்கு எதிராக பதிவு செய்யாமல் இருக்கும் வழக்குகள் எத்தனை என தமிழக மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. கோவை எஸ்.பி.அலுவலகத்தில் காதலர்கள் இருவர் வழங்கிய முறைப்பாடொன்றில் தாம் சாலையில் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் மற்றும் காவலர் ஒருவர் தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 10 ஆயிரம் பெற்றுக்கொண்டனர் எனத் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்துடன் காவலர் ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதை அடுத்து தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ள தமிழக மனித உரிமை ஆணையகம் சம்பந்தப்பட்ட இரு காவலர்கள் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளதுடன் வழக்குப் பதிவு செய்யாத அதிகாரிகள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படிம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்று காவல்துறையினருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் எத்தனை, லஞ்சம் வசூலித்ததற்காக காவல்துறையினருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் எத்தனை நிலுவையில் உள்ளன என்பது குறித்த விவரங்கள் ஆகியவற்றும் தமிழக டிஜிபி 4 வாரத்தில் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது