184
தாம் எந்தவிதமான குற்றங்களுடனும் தொடர்பில்லை என்றால், மைத்திரி, ரணில், மகிந்த ராஜபக்ச ஏன் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு அச்சப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவரும் அழைக்கப்பட்டு, சாட்சியங்கள் பெறப்பட வேண்டும் என்றும் கூறினார். அத்துடன் தாக்குதல்கள் தொடர்பில் அறிந்திருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களிடம் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பத்தரமுல்லையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதேபோன்று பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் மீது எவ்வித குற்றமும் இல்லை என்றால், தாக்குதல்களுக்கு அவர் பொறுப்புக்கூறத் தேவையில்லை என்றால் தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியம் அளிப்பதற்கு அவர் அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, தெரிவுக்குழு குறித்து ஜனாதிபதி முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்களிலிருந்தும், தெரிவுக்குழுவில் முன்நிலையாகுவதற்கு அவர் தயங்குவதிலிருந்தும் தாக்குதல்கள் தொடர்பான குற்றவாளி தான் என்பதை ஜனாதிபதியின் மனசாட்சி அறிந்திருப்பது தெளிவாகிறது என்றும் அனுரகுமார குறிப்பிட்டார். அத்துடன் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கும் இந்த அரசு தயாராகி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
#மைத்திரி #ரணில் #மகிந்த #தெரிவுக்குழு #அச்சப்பட #அநுரகுமார
Spread the love