தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மடுக்கரை கிராமத்தில் அமைக்கப்பட்ட 211 ஆவது மாதிரிக் கிராமமான குறிஞ்சி நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட 42 வீடுகளை அமைச்சர் சஜித் பிரேமதாஸ இன்று திங்கட்கிழமை(1) காலை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
2025 ஆம் ஆண்டில் யாவருக்கும் வீடு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் குறித்த திட்டத்திற்கு அமைவாக தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மடுக்கரை கிராமத்தில் அமைக்கப்பட்ட 211 ஆவது மாதிரிக் கிராமமான ‘குறிஞ்சி நகர்’ கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஜெ.நோயல் ஜெயச்சந்திரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ்,பிரதேசச் செயலாளர்கள், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச, நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்ஜோதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக், ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சமீயு முஹம்மது பஸ்மி, முன்னால் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த வீடுகளை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து அங்கு இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் கடமையாற்றிய இருவருக்கு நிறந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டதோடு,தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மூக்குக்கண்ணாடிகள் , சுய தொழில் உபகரணங்கள்,கடன் திட்டம் ஆகியவை அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #மன்னார் #மாதிரிக்கிராமம் #திறந்துவைப்பு #குறிஞ்சி நகர் #சஜித் பிரேமதாஸ