நான்கு வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (3.07.19) முன்னிலையாகுமாறு கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவித்தானவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் வர்ண நிழற்படத்தை பாடசாலைப் புத்தகங்களில் அச்சிட்டதால் நிதி வீண்விரயம் ஏற்பட்டுள்ளதாக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர் இன்று அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு தொடர்பில், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் ஐ.எம்.கே.பி. இலங்கசிங்கவும் வாக்கமூலம் வழங்கியுள்ளார்.
நன்மதிப்பை அதிகரித்துக் கொள்வதற்காக தமது நிழற்படத்தை பாடப்புத்தகங்களில் அச்சிடுமாறு அமைச்சர் தம்மிடம் கூறியதாக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியிருந்தார். எனினும் ஐ.எம்.கே.பி. இலங்கசிங்கவிடம் தாம் அவ்வாறானதொரு கருத்தை முன்வைக்கவில்லை என கல்வி அமைச்சர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேற்று முன்தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவற்துறைப் பிரிவில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். #ஜனாதிபதிஆணைக்குழு #அகிலவிராஜ்காரியவசம், #கல்விவெளியீட்டுத்திணைக்களம்