பௌத்த மதத்தை பாதுகாத்து அதற்கு முன்னுரிமை வழங்கக் கூடிய அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இஸ்லாமிய தனிச் சட்டங்களை உடனடியாக நீக்க வேண்டும். அடிப்படைவாத கல்வியை போதிக்கும் அனைத்து கல்வி நிலையங்களையும் காலதாமதமின்றி அரசு தடை செய்ய வேண்டும் என்பது உட்பட ஒன்பது தீர்மானங்களை பொதுபல சேனா நிறைவேற்றியுள்ளது.
பொதுபல சேனாவின் விசேட மாநாடு நேற்று கண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிலேயே இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அந்த தீர்மானங்களின் உள்ளடக்கம் வருமாறு:
01. சிங்கள இராச்சியம் உருவாக்க பாரிய மாற்றங்கள்
1815 ஆம் ஆண்டு சிங்கள இராசதானிகளுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையில் செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் பறிக்கப்பட்ட உரிமைகளை மீள பெற்றுக் கொள்வதற்கு சிங்கள இராச்சியம் உருவாக்க பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
பௌத்த மதத்தினை பாதுகாத்து எழுச்சி பெற செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும், அத்துடன் ஏனைய மதங்களின் உரிமைகளும், அடிப்படை மனித உரிமைகளும் ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்டு பாதுகாக்கப்படுதல் அவசியம்.
இலங்கையின் தேசிய கலாச்சாரம் மற்றும் மரபுரிமையினை நிர்மாணித்த சிங்களவர் பூமி புத்திரர்களாக அடையாளப்படுத்தப்பட வேண்டும்.
சிங்கள மொழியினை பேசும் அனைத்து மக்களையும் ஒன்றுத்திரட்டி பலம் வாய்ந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதுடன், பின்பற்றப்படும் மதங்களை கொண்டு இனங்கள் பிளவுப்பட்டிருப்பது நிறுத்தப்பட வேண்டும். அதாவது சிங்கள பௌத்தம், சிங்கள கிறிஸ்தவம், சிங்கள இஸ்லாம், சிங்கள இந்து என்று பல்வேறு மத பிரிவினர் தற்போது சமூகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
சிங்கள நாட்டில் அனைத்து இனங்களும் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும்.
02. ஒரு நாடு, ஒரு இனம், ஒரே நீதி
மேலைத்தேய அரசியல் செயலொழுங்கு மற்றும் மக்களின் வாழ்க்கை முறைமை குறிப்பாக ரோம், இலத்தீன், மற்றும் ஆங்கிலேயரின் உருவாக்கமாகவே அரசியலமைப்பு காணப்படுகின்றது. எமது நாட்டினை பாதுகாக்கும், சுதேச இனங்களுக்கு தேவையான சட்டங்களும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட வேண்டும்.
இதற்கமைய நிறைவேற்று துறை, சட்டத்துறை மற்றும் நீதித்துறை அரச பரிபாலனம், சட்டசெயலொழுங்குகள் ஆகியவை மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
ஒவ்வொரு மத குழுக்கள் அல்லது ஒரு இனத்தை மையப்படுத்தி மத மார்க்கங்களை சட்டமாக்கியுள்ளமை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். அனைத்து இனங்களும் பொது தேசிய சட்டத்திற்கு மதிப்பளித்து , அதன் பிரகாரம் செயற்படுவது கட்டாயமாக்கப்படுதல் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
நாட்டின் பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்த தவறியுள்ள தற்போதைய தேர்தல் திருத்த முறைமைக்கு பதிலாக அனைத்து இனங்களையும் ஒன்றுப்படுத்தும் புதிய தேர்தல் திருத்த முறைமை நடைமுறைப்படுத்தப்படல் அவசியம்.
மதம் மற்றும் இனங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் அனைத்து அரசியல் கட்சிகளும் பகிரங்கமாக இரத்து செய்யப்பட வேண்டும்.
03. பௌத்த மத பாதுகாப்பு மற்றும் எழுச்சி பெறல்.
அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த மதம் பாதுகாக்கப்பட்டு மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும்.இதுவே எமது முதல் கோரிக்கையாகும்.
பௌத்த மத பாதுகாப்பது தொடர்பில் அரசியல் அமைப்பில் முறையான விளக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போது இவ்விடயங்கள் செயற்படுத்தப்படவில்லை. இதற்கு தீர்வு காண எவரும் முன்வரவும் இல்லை. புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும் வரையில் தற்போதைய அரசியலமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பின்பால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும், அங்கிகாரத்தினையும் ஏனைய மதங்களுக்கும் வழங்குதல் அவசியம். பௌத்த மத எழுச்சியில் அரசாங்கம் நேரடியாக தொடர்புப்படுதல் வேண்டும்.
மாறுப்பட்ட அடிப்படைவாத அமைப்புக்கள் செயற்படுவதற்கு அரசாங்கம் வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்பது தெளிவாகியுள்ளது. தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அடிப்படைவாத மதங்கள் தொடர்பில் மாறுப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதற்கு பலம் வாய்ந்த அரச செயலொழுங்கு தேவை.
04. தேசிய பாதுகாப்பு
எமது நாடு வரலாற்று காலம் தொடக்கம் பல ஆக்ரமிப்புக்களுக்கு உட்பட்டு போராடி வெற்றிக் கண்டுள்ளது. சர்வதேச அரசியலில். இலங்கையின் பௌதீக நிலப்பாங்கு மற்றும் மரபுரிமையான கலாச்சாரங்கள் அனைத்தும் பெறுமதியானவை இதுவே பலரது எதிர்பார்ப்புகளுக்கு மூல காரணம்.
இனபாகுப்பாட்டை முன்னிலைப்படுத்தி 30வருட சிவில் யுத்தத்திற்குள் பிடிப்பட்டிருந்த நாடு தற்போது மதவாதம், சமூக வேறுபாடு, மத அடிப்படைவாதம் என்பவற்றைக் கொண்ட தீவிரவாதத்துக்குள் சிக்கியுள்ளது. இந்நிலைமை தொடர்ந்தால் மத போராட்டமே எதிர்காலத்தில் தோற்றம்பெறும்.
மதவாதம், இனவாதம் ஆகியவற்றை முழுமையாக துடைத்தெறிய வேண்டுமாயின் ‘இனங்கள் ஒரு சக்கரம்’ என்ற கொள்கையின் கீழ் ஒன்றுப்பட வேண்டும். இலங்கையர் என்ற நிலைப்பாட்டில் இருந்தால் மாத்திரமே மதவாத தீவிரவாதத்தை வெற்றிக் கொள்ள முடியும்.
மத அடிப்படைவாத அமைப்புக்கள் எவ்வித நிபந்தனைகளுமின்றி தடைசெய்யப்பட வேண்டும். பிரத்தியேக சட்டம், வங்கி முறைமை , நீதிமன்றத்தின் ஊடாக அனுமதி பெற்ற தனி நிறுவன உருவாக்கம் என்பவை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டு பாரபட்சமின்றி தடைசெய்ய வேண்டும்.
இனவாதம், மத பாகுப்பாடு, மத அடிப்படைவாதம், மற்றும் சர்வதேச தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக பொது தேசிய கொள்கை திட்ட கண்காணிப்பிற்காக அனைத்து தேசிய சக்திகளையும் ஒன்றுப்படுத்தி ‘ தேசிய கண்காணிப்பு மத்திய நிலையம் ‘ ஸ்தாபிக்கப்படுதல் காலத்தின் கட்டாயமாகும்.
05. தேசிய உரிமை பாதுகாப்பு
2500ஆம் ஆண்டுற்கும் அப்பாற்பட்ட வரலாற்று பின்னணியை கொண்ட பௌத்தமத நாட்டின் பௌத்த மத மரபுரிமைகள், விகாரைகள் மற்றும் தொல்பொருட்கள் ஆகியவை திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன. தொல்பொருள் என்று அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களும் இன்று சட்டவிரோதமான முறையில் ஒரு தரப்பினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சிங்கள மொழியினையும், பௌத்த மத மரபுரிமைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களையும் தேசிய மரபுரிமையாக்கி பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தேசிய உரிமையினை பலப்படுத்தும்.
திட்டமிட்ட வகையில் பௌத்த மத மரபுரிமைகளை அழிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சிங்கள கலாச்சாரங்கள் உலகளாவிய ரீதியில் பேசும் அளவிற்கு முன்னுரிமை கொடுக்கப்படுதல் அவசியம்.
06.நிலையான பொருளாதாரம்
நடப்பு பொருளாதாரம் முறைமைகளில் சிங்களவர்களுக்கு குறுகிய இடமே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலைமையில் இருந்து விடுப்பட வேண்டுமாயின் தேசிய கொள்கையினை மையப்படுத்திய பொருளாதார திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
தேசிய பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பாரம்பரிய உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கபட வேண்டும். சுதேசிய உற்பத்திகளை வளர்ச்சி செய்யும் போது பிற தரப்பினரின் உற்பத்திகளை இரண்டாம் தரப்பினராக்குதல் அவசியமாகும்.
கௌரவமான தொழில்களை மக்கள் புரிய வழிமுறைகளை ஏற்படுத்துவதுடன். அரபு நாடுகளுக்கு அடிபணியாத வகையில் பெண்களை வீட்டு பணிகளுக்கு அனுப்பாத வகையில் தேசிய தொழில்கள் உறுதியாகவும், வினைத்திறனானதாகவும் காணப்பட வேண்டும்.
தேசிய பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் போது இனங்களுக்கு முன்னுரிமை கொடுக்க கூடாது . தற்போது இனரீதியில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகள் இரத்து செய்யப்பட வேண்டும்.
07. தேசபற்றினை கொண்ட கல்வி
எமது கல்வி முறைமையில் இனத்தையும், எதிர்கால தலை முறையினரையும் இல்லாதொழிக்கும் வழிமுறைகளே மிக சூட்சமமான முறையில் காணப்படுகின்றது. சிங்கள பௌத்த இனங்களின் பாரம்பரியம் மற்றும் மத கோட்பாடுகள் அறிந்துக் கொள்ள முடியாத அளவிற்கு தற்போதைய கல்வி முறைமைகள் காணப்படுகின்றன. இது சிங்கள பௌத்த சமூகத்திற்கு பாதகமானது.
ஆங்கில கல்வி அவசியமானது. கிராமிய பாடசாலைகளில் இருந்து ஆங்கில கல்வி கற்பிக்கப்பட வேண்டும். தற்போது ஆங்கில பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பாடதிட்டங்களே காணப்படுகின்றன. மதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
பௌத்த சிங்கள மாணவர்கள் எதிர்க் கொள்ளும் இப்பிரச்சினைக்கு தீர்வு அவசியம். அனைத்து பாடசாலைகளிலும் பிரிவினா கற்கைகள் ஆங்கில பாடத்தை போன்று கட்டாயமாக்கப்பட வேண்டும். தேசத்தின் மீது பற்றுக்களையும், பொது கலாச்சாரங்கள் தொடர்பிலும் மாணவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்து பாடசாலை மட்டத்தில் போதிப்பதால் அடிப்படைவாதம் ஒருபோதும் தோற்றம் பெறாது. நாட்டு மீதான பற்று அனைத்து இனங்களுக்கும் பொதுவானது.
அனைத்து பிரஜைகளும் உயர் கல்வியினை பெற்றுக் கொள்ள வேண்டும். மதம் மற்றும் ஒரு இனத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் பாடசாலைகள் தடை செய்யப்பட வேண்டும். மத அடிப்படைவாதம் மாணவர்களின் பாடத்திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் நீக்கப்பட வேண்டும்.
08. வீடமைப்பு , உட்கட்டமைப்பு வசதிகள், சனத்தொகை மதிப்பீட்டு முகாமைத்துவம்
சிங்கள தாய்மார்களை இலக்காகக் கொண்டு கருத்தடை செய்துள்ளமை தற்போது வெளிப்பட்டுள்ளது. இதற்கு உரிய சட்ட நடவ டிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.ஒரு இனத்தை இல்லாதொழிப்பதற்கு திட்டமிட்டு செய்யப்டும் இந்த கொடுமைகள் அழிக்கப்பட வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது உள்ள பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வாக முறையான தேசிய கொள்கையினை உள்ளடக்கிய அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் அரசியல்வாதிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றை மீள அரசுடமையாக்குவது தேசிய பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும்.
09. சுகாதாரம் மற்றும் போசனை.
சுகாதாரம் இன்றியமையாததாகும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைமைக்கு அடையாளப்படுத்தப்பட்ட கொள்கைத்திட்டங்கள் அரசாங்த்தினால் வகுக்கப்பட வேண்டும். தற்போது மக்கள் எதிர்க் கொள்ளும் புதிய நோய்களுக்கு தேசிய மருத்துவத்தின் ஊடாக தீர்வு காணல் அவசியம்.
ஹலால் உள்ளிட்ட உணவு வகைகள் தடை செய்யப்ப ட வேண்டும். அவ்வாறான உணவு வகைகள் அவர்களின் தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்திக் கொள்வது அவர்களின் தனிப்பட்ட விடயமாகும். தேசிய மருத்துவம், சிங்கள பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்கை முறைமைகள் தொடர்பில் இளைய தலைமுறையினர் தெரிந்துக் கொள்வது அவசியமாகும். எமது இனம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் பாரம்பரியங்கள் பின்பற்ற வேண்டியது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட கடமையாகும். #தேசியபாதுகாப்பு #பௌத்தமதம் #பொதுபலசேனா #இஸ்லாமியதனிச்சட்டங்கள்