உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் இவ்வாறான செயற்பாடுகள் தலைதூக்குவதை தடுக்க அமெரிக்கா இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சமுத்திர மற்றும் தேச எல்லை பாதுகாப்பு என்பனவற்றுக்கு இலங்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. ஜனநாயகம், சட்டவாட்சி, மனித உரிமைகள் என்பனவற்றை உறுதிப்படுத்துவதற்காக இருதரப்பு உறவுகளை வலுவூட்டுவதன் அவசியத்தை அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் நீதியை நிலைநாட்டல் போன்ற விடயங்கள் பற்றி இலங்கை மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்புக்களையும் அமெரிக்க ஜனாதிபதி பாராட்டியுள்ளார். அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள டொட்னி பெரேரா அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து நற்சான்று பத்திரத்தை கையளித்தார். இந்த நிகழ்வின் போது இருதரப்பு உறவுகள் பற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.