Home இந்தியா இந்தியாவில் பெண்களின் தற்கொலை விகிதம் குறைந்து வருகின்றது

இந்தியாவில் பெண்களின் தற்கொலை விகிதம் குறைந்து வருகின்றது

by admin


இந்தியாவில் பெண்களின் தற்கொலை விகிதம் கடந்த சில ஆண்டுகளாகவே மிக வேகமாகக் குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும், அதில் 17 சதவிகிதமான 1.35 லட்சம் தற்கொலைகள் இந்தியாவில் நிகழ்வதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2016ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் மொத்தம் 2.30 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் எனவும் திருமணம் ஆகாமல் இருப்பது, விவாகரத்து, வரதட்சணை, பாலியல் தொல்லை, தேர்வில் தோல்வி, பெரும் வியாதிகள், மனநல பாதிப்பு, உள்ளிட்ட காரணிகள் தற்கொலைகளுக்குக் காரணங்களாக இருக்கின்றன.

இந்நிலையில், இந்தியாவில் பெண்களின் தற்கொலை விகிதம் தற்போது குறைந்துவருவதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். நேற்றைதினம் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய குற்ற அறிக்கைப் பணியகத்திடமிருந்து கிடைத்த விவரங்களின்படி, 2013ஆம் ஆண்டில் 44,256 ஆக இருந்த தற்கொலை செய்த பெண்களின் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டில் 42,521 ஆகவும், 2015ஆம் ஆண்டில் 42,088 ஆகவும் குறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பெண்களின் பாதுகாப்புக்காக ஒரு நிறுத்த மையத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கான பாதுகாப்பு, மருத்துவ உதவி, காவல் துறை ஆதரவு, இருப்பிட வசதி போன்ற உதவிகளை அரசு வழங்கிவருவதாகவும் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவில் பெண்களின் தற்கொலைகள் குறைந்து வந்தாலும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது தற்கொலை சம்பவங்கள் மிக அதிகமாகவே நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது #இந்தியா #பெண்களின் #தற்கொலை #ஸ்மிருதி இரானி

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More