தபால்துறை வேலைகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வுகள் நடத்தாமல், இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுதமுடியும் என மத்திய அரசு கொண்டுவந்த விதிமுறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்தில் தேர்வு முடிவை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தபால் துறையில் அஞ்சலர் உள்பட நான்கு வகையான பணியிடங்களுக்கான தேர்வு இந்தியா முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்தநிலையில் கடந்த ஜூலை 11ஆம் திகதி மத்திய தபால் துறை வெளியிட்ட அறிவிப்பில் தபால் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுவரை தமிழ் உள்ளிட்ட 15 மாநில மொழிகளில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் எழுதமுடியும் என்ற விதிமுறைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இந்தநிலையில் மதுரையில் இயங்கும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் இந்த புதிய விதிமுறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கினை அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் இவ்வாறு தேர்வு முடிவை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன் மாநில மொழி அல்லாமல் ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே தேர்வு எழுதவேண்டும் என்ற புதிய விதிமுறைக்கான காரணம் என்ன என மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டுமம் எனவும் தெரிவித்து வழக்கினை ஜூலை 19ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர் #தமிழகத்தில் #தபால்துறை தேர்வு #முடிவை #வெளியிடத் தடை