உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பொடுத்தாட தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்து அணி சார்ப்பில் ஹென்றி நிக்கோல்ஸ் 55 ஓட்டங்களையும், லத்தம் 47 ஓட்டங்களையும், அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்த வீச்சில் லியம் பிளன்கட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர். அதனடிப்படையில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 242 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 241 ஓட்டங்களைப் பெற்றதில் போட்டி சமநிலை அடைந்தது. இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் பெர்கசன் 3 விக்கெட்களையும், ஜேம்ஸ் நீஸாம் 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர். அதன் பின்னர் சுப்பர் ஓவர் அடிப்படையில் வெற்றியாளர்களை தெரிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி சுப்பர் ஓவரில் 15 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியும் 15 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதில் சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிந்தது. அதன் அடிப்படையில் இரு அணிகளும் அடித்த 4 ஓட்டங்களின் அடிப்படையில் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்று இம்முறை உலகக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. 4 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்த இங்கிலாந்து அணி முதல் முறையாக உலக கிண்ணத்தை தனதாக்கியமை குறிப்பிடத்தக்கது.
உலக கிண்ணத்தை கைப்பற்ற, 242 ஓட்டங்களை நோக்கி ஓடுகிறது இங்கிலாந்து….
இங்கிலாந்து அணியுடான சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூஸிலாந்து அணி 241 ஓட்டங்களை குவித்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை இலங்கை நேரப்படி 3.10 மணியளவில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.
மார்டின் குப்டில் – ஹென்றி நிக்கோலஷ் ஆகியோர் அந்த அணியின் ஆரம்ப வீரர்களாக களமிறங்கி துடுப்பெடுத்தாடிவர முதல் ஆறு ஓவரில் நியூஸிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 28 ஓட்டங்களை குவித்தது.
எனினும் 7 ஆவது ஓவரின் இரண்டாவது பந்து வீச்சில் மார்டின் குப்டில் எல்.பி.டபிள்யூ. முறையில் 19 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வில்லியம்சன் களமிறங்கி ஹென்றி நிகோலஷ்ஷுடன் கைகோர்த்து பொறுமையுடன் ஆடி வந்தார்.
இதனால் நியூஸிலாந்து அணி 10 ஓவரில் 33 ஓட்டத்தையும், 20 ஓவரில் 91 ஓட்டத்தையும் பெற்ற 22.4 ஆவது ஓவரில் வில்லியம்சன் 30 ஓட்டத்துடன் பிளன்கட்டின் பந்து வீச்சில் பட்லரிடம் பிடிகொடுத்து வெளியேறினார் (103-2.)
மூன்றாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ரோஸ் டெய்லருடன் ஜோடி சேர்ந்த நிக்கோலஷ் 25.1 ஆவது ஓவரில் அரைசதம் விளாசினார். இருப்பினும் அவர் 26.5 ஆவது ஓவரில் மொத்தமாக 77 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டம் அடங்கலாக 55 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
நான்காவது விக்கெட்டுக்காக டெம் லெதம் களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க ரோஸ் டெய்லர் 33.1 ஆவது ஓவரில் 15 ஓட்டத்துடனும், அடுத்து வந்த ஜேம்ஸ் நீஷம் 39 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் 19 ஓட்டத்துடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒரு கட்டத்தில் நியூஸிலாந்து அணி 40 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஆடுகளத்தில் டொம் லெதம் 24 ஓட்டத்துடனும், கிரேண்ட்ஹோம் 5 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.
தொடர்ந்து 44 ஆவது ஓவரில் 200 ஓட்டங்களை கடந்ததுடன் 45 ஆவது ஓவரில் 211 ஓட்டங்களையும் நியூஸிலாந்து அணி பெற்றது. இதன் பின்னர் 46.5 ஆவது ஓவரில் கிரேண்ட்ஹோம் 16 ஓட்டத்துடன் ஜோப்ர ஆர்ச்சரின் பந்து வீச்சில் வின்சிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூஸிலாந்து இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஆடுகளத்தில் மிட்செல் சாண்டனர் 5 ஓட்டத்துடனும், டிரெண்ட் போல்ட் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் லியாம் பிளாங்கட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்களையும், ஜேப்ர ஆர்ச்சர் மற்றும் மார்க்வூட் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
photo credit : icc