தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் தமிழ் அரசியல் தலைவர் அமிர்தலிங்கமும் சந்தித்துக் கொண்டதாகவும் பிரபாகரனை அமீர் ஊக்கப்படுத்தியதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிழலைக்கூடக் காணாதவர்களே இப்போது அவரைப் பற்றி அதிகமாகப் பேசுவதாகவும் தம்மால் புலிகளின் வரலாற்றை எழுத முடியும் என்றும் குறிப்பிட்டார்.
வலி.மேற்குப் பிரதேச சபை மண்டபபத்தில் நேற்று இடம்பெற்ற அமிர்தலிங்கத்தின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் போராட்ட வரலாற்றைக் கூறிய மாவை சேனாதிராஜா, அவருடன் சேர்ந்து இயங்கிய சம்பவங்களையும் பதிவு செய்தார்.
அமிர்தலிங்கம் இந்தியாவில் இருந்தபோது அனுப்பிய கடிதம் ஒன்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டதால் சிறைசெல்ல நேரிட்டதாகவும் அது தொடர்பில் மயிலிட்டி துறைமுகத்துக்கான நிகழ்வில் கலந்து கொண்ட அரச தலைவரிடமும் தாம் தெரிவித்ததாகவும் நினைவுபடுத்தினார்.
அத்துடன் அமீர்தலிங்கம், பிரபாகரனை சந்தித்தார் என்பதும் அவர் எவ்வளவு தூரம் அவர்களை நேசித்தார் என்பதையும், அவர்களை ஊக்கப்படுத்தினார் என்பதையும் தமக்கு நன்கு தெரியும் என்றும் மாவை குறிப்பிட்டார்.
அவர் இந்தியாவில் இருக்கும்போதும் புலிகளை ஊக்கப்படுத்தியதாகவும் ஆனால் காலம் தவறாகக் கையாளப்பட்டிருப்பதாகவும் அவ்வாறு நடக்காத பட்சத்தில், இன்றுவரையும் பிரபாகரன், புலிகள் இயக்கத்தை கொண்டு நடத்தியிருக்ககூடிய சந்தர்ப்பங்கள் இருந்திருக்கும் என்றும் இது பலருக்கு தெரியாதபோதும் தமக்குத் தெரியும் என்றும் மாவை கூறினார்.