மன்னார் எருக்கலம் பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக வைத்திருந்த 1018.9 கிலோ கிராம் எடை கொண்ட உலர்ந்த கடல் அட்டைகளை நேற்று புதன் கிழமை (17) கடற்படையினர் மற்றும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது மீட்டுள்ளதோடு,சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படையினர் மற்றும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் இணைந்து தலை மன்னார் மற்றும் எருக்கலம்பிட்டி பகுதியில் நேற்று புதன் கிழமை திடீர் சோதனைகளை மேற்கொண்டனர். குறித்த சோதனை நடவடிக்கையின் போது எருக்கலம்பிட்டி பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உலர்ந்த கடல் அட்டைகளை கண்டு பிடித்தனர்.
சுமார் 1018.9 கிலோ கிராம் உலர்ந்த கடல் அட்டைகள் மீட்கப்பட்டதோடு, வீட்டு உரிமையாரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களம் அனுமதித்த அளவை மீறி, அதிக அளவு கடல் அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, உலர்ந்த கடல் அட்டைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். #சட்டவிரோதமாக #உலர்ந்த #கடல்அட்டைகள் #பறிமுதல் #மன்னார்