குழந்தைகள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்கவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் பயன்படுத்தப்படும் போக்சோ சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியுள்ளது.
அண்மைக்காலமாக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ள நிலையில், போக்சோ சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர முடிவு செய்தது.
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
திருத்தப்பட்ட போக்சோ சட்ட வரைவு மசோதாவினை மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில் தாக்கல் செய்திருந்த நிலையில் இம்மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மக்களவை ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ளது.
இந்த மசோதா சட்டமாக இயற்றப்பட்டால், 16 வயதுக்குக் குறைவான குழந்தைகளிடம் கொடூரமான முறையில் வன்கொடுமை போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்குச் சிறைத் தண்டனை 10 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அது ஆயுள் தண்டனையாகவும் நீட்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகளை ஆபாசப் படங்களில் ஈடுபடுத்தினால் அபராதத்துடன், 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் என்பதுடன் அவர் இரண்டாவது முறையும் அதே குற்றத்தில் ஈடுபட்டால் அபராதத்துடன் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #போக்சோ சட்ட #மசோதா # மாநிலங்களவை #குழந்தைகள்