யாழில். சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வைரவர் ஆலயம் ஒன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு வந்த அயலவரான முதியவர் ஒருவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள மாவிளந்தையடி ஞான வைரவர் கோவில் நேற்று புதன்கிழமை இரவு இனம் தெரியாத கும்பல் ஒன்றினால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலயத்தில் இருந்த வைரவர் சிலை உள்ளிட்ட விக்கிரங்களையும் அக்கும்பல் களவாடி சென்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அயலவரான முதியவர் ஒருவர் தெரிவிக்கையில் ,
குறித்த ஆலயம் பல வருடங்கள் தொன்மையானது. அவ்வாலயத்தை பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பம் ஆதரித்து வந்தது. அக்குடும்பத்தில் இறுதியாக ஆதரித்து வந்தவர் 1983 ஆம் கால பகுதியில் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டுக்கு செல்லும் போது , ஆலயத்தில் அனைத்து தரப்பினரும் வழிபாடுகளை மேற்கொள்ள வழியமைத்து கொடுத்தார்.
அதனை தொடர்ந்து அயலவர்கள் பலரும் வைரவரை வழிபட்டு வந்தனர். அந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு கால பகுதியில் , ஆலயத்திற்கு அருகில் வசிப்போர் , புலம்பெயர் தேசத்தில் வசிப்போர் என பலரின் நிதி பங்களிப்புடன் ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு கும்பாபிசேகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பான முறையில் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் குறித்த ஆலயத்தினை ஆரம்ப காலங்களில் ஆதரித்து வந்த குடும்பத்தின் சகோதரர்களுக்கு இடையில் கருத்து மோதல்கள் உருவாகி முரண்பாடுகள் தேற்றம் பெற்றன. குறித்த ஆலயமே கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெற காரணமாக அமைந்திருந்தன.
இந்நிலையிலையே ஆலயத்தினுள் புகுந்த கும்பல் ஒன்று ஆலயத்தினை முற்றாக இடித்தழித்து , ஆலய விக்கிரகங்களை களவாடி சென்றுள்ளனர்.
குறித்த கும்பலை புலம்பெயர் நாட்டில் வாழும் ஆலயத்தினை முன்னைய காலத்தில் ஆதரித்து வந்தவரின் மகளே காசு கொடுத்து கூலிக்கு அமர்த்தி இந்த நாசகார செயலை செய்வித்துள்ளார் என நாம் சந்தேகிக்கின்றோம்.
ஆலயம் இடித்தழிக்கப்பட்டு, விக்கிரகங்கள் களவாடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம். காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதேவேளை ஆலயம் இடிக்கப்பட்டமை தொடர்பில் இந்து சமய பெரியவர்கள் , அமைப்புக்கள் உள்ளிட்டவற்றுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் இடிக்கப்பட்ட ஆலயத்திற்கு நேரில் வந்து பார்த்து எமக்கு ஆறுதல் கூறி சென்றுள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் ஆலயத்திற்கு நிதியுதவி கோரி இருந்தோம். அவரும் நிதி ஒதுக்கி இருந்தார். அந்நிதியில் ஆலயத்தினை மேலும் சில புனரமைப்பு வேலைகளை செய்ய முயன்ற போதிலேயே ஆலயம் முற்றாக இடித்தழிக்கப்பட்டுள்ளது என கவலையுடன் முதியவர் தெரிவித்தார். #யாழில் #ஆலயம் #இடித்தழிப்பு #சகோதரர்களுக்கு