யாழ்.வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணியில் மகாபோதி அமைக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவுள்ளதாக வலி,வடக்கு பிரதேசசபை தவிசாளா் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வலி,வடக்கு கிராமங்களில் மிக நீண்டகாலத்திற்கு முன்னா் பேக்கரிகள், சீமெந்து தொழிற்சாலைகளில் பணியாற்றிய பௌத்தா்கள் வழிபாடுகளை நடாத்துவதற்காக சுமார் 20 பரப்பு காணியில் 1946ம் ஆண்டு காலப்பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு பௌத்த விகாரை அமைக்கப்பட்டிருந்த இடத்தில், பௌத்த விகாரைக்கு சொந்தமான காணியில் விகாரை கட்டப்படுவதில் தமக்கு ஆட்சேபனைகள் எதுவும் இல்லை.
ஆனால் பௌத்தா்களே வாழாத பகுதியில் மக்களுக்கு சொந்தமான காணியை அபகரித்து மகாபோதி அமைப்பது பொருத்தமற்ற விடயம். இந்நிலையில் தனியார் காணியில் மகாபோதி அமைப்பதற்கு பௌத்த பிக்கு ஒருவா் வலி,வடக்கு பிரதேசசபையிடம் அனுமதி கோரியுள்ளார்.
ஆனாலும் அதற்கான அனுமதியை வழங்கப்படவில்லை. இருந்த போதிலும், தனியார் காணியில் மகாபோதி அமைக்கப்படுவதனை எதிர்த்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீா்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.