ஏற்கனவே அரச பணியில் கடமையாற்றிக்கொண்டிருந்த பட்டதாரிகள் , அரச பணி தேடிய பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனத்திற்காக விண்ணப்பித்து அதனை பெற முயன்ற 104 பேர் நேற்றைய தினம் புதன்கிழமை வரையில் இனம் காணப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அரச வேலை தேடிய பட்டதாரிகளுக்கு கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அரச நியமனங்கள் வழங்கப்பட்டன. அதில் வெளிவாரி பட்டதாரிகள் உள்ளிட்ட பலருக்கு அரச நியமனம் வழங்கப்படவில்லை.
அந்நிலையில் ஏற்கனவே அரச நியமனம் பெற்று அரச பணியில் உள்ள பலருக்கு மீளவும் அரச நியமனம் கிடைத்துள்ளதாக அரச நியமனம் கிடைக்காத பலரும் குற்றசாட்டுக்களை முன் வைத்தனர்.
கடந்த காலங்களில் மாகாண மற்றும் மத்திய அரசால் வழங்கப்பட்ட நியமனங்களை பெற்ற பலரும் வெளிமாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு பணியாற்றி வருபவர்கள் தற்போது வழங்கப்பட்ட அரச நியமனங்களை மீள பெற்று அதன் மூலம் தமது சொந்த மாவட்டங்களில் கடமையாற்ற முனைகிறார்கள் எனும் குற்றசாட்டையும் அரச நியமனம் கிடைக்காத பட்டதாரிகள் சுமத்தியிருந்தனர்.
அது தொடர்பில் யாழ்.மாவட்ட செயலர் நா. வேதநாயகன் தெரிவிக்கையில் ,
யாழ். மாவட்டத்தில் இன்னமும் சுமார் 2ஆயிரத்து 750 பேர் அரச நியமனம் தேடும் பட்டதாரிகளாக உள்ளனர். அவர்கள் தமக்கும் அரச நியமனங்கள் வழங்க வேண்டும் என கோரி வருகின்றனர். அவர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது.
இவ்வாறான நிலையில் ஏற்கனவே அரச பணியில் இருந்து கொண்டு, அதனை மறைத்து பிறிதொரு அரச பணிக்கு பலர் விண்ணப்பித்து உள்ளனர். அது தண்டனைக்குரிய குற்றமாகும். அக்குற்றம் நிரூபிக்க படும் பட்சத்தில் , இரு பணிகளையும் இழக்க நேரிடுவதுடன் , ஏற்கனவே பணியாற்றியதன் மூலம் பெற்றுக்கொண்ட சம்பளம் முழுவதும் மீள செலுத்த வேண்டும். அல்லது சிறைவாசம் அனுபவிக்க கூட நேரிடலாம்.
எனவே தாம் பட்டதாரிகள் என்பதனை மறைத்து க.பொ,த. உயர்தர கல்வி தகமையுடன் வழங்கப்படும் அரச பணியை பெற்றவர்கள் அதனை மறைத்து , பட்டதாரி நியமனத்தை பெற முயற்சிப்பது , வேறு திணைக்களங்கள் அல்லது பிற மாவட்டங்களில் நியமனம் கிடைக்க பெற்றதால் . அதனை மறைத்து தற்போது கிடைக்கும் பட்டதாரி நியமனத்தை பெற முயல்வது குற்றமாகும்.
ஏற்கனவே அரச பணியில் உள்ளவர்களின் பெயர்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகள் நியமனத்தில் இருக்கின்றதா என்பதனை பரிசோதித்து அவ்வாறுள்ள பெயர்களை நீக்கி வருகின்றோம். அவ்வாறாக இது வரையில் யாழ்.,மாவட்டத்தில் 104 பேரின் பெயர்களை இனம் கண்டு நீக்கியுள்ளோம்.
தற்போது நியமனம் பெற்றுள்ளவர்கள் தமது உறுதி மொழியின் போது , இதுவரையில் எந்த அரச பணியிலும் தாம் கடமையாற்ற வில்லை என உறுதி கூறுகின்றார்கள். அந்நிலையில் அவர்கள் வேறு அரச பணியில் இருந்து அதனை கைவிட்டு தற்போதைய நியமனம் மூலம் அரச பணியை பெற்றது கண்டறியப்பட்டால் , அதன் மூலம் ஏற்படும் அனைத்து விடயங்களுக்கும் அவர்களே பொறுப்பாளிகள் ஆவார்கள் என மேலும் தெரிவித்தார். அரச பணியில் இருந்து கொண்டு மீள நியமனத்திற்காக விண்ணப்பித்த 104 பேர் இனம்காணப்பட்டுள்ளனர்#அரச பணி #நியமனத்திற்காக #விண்ணப்பித்த #இனம்காணப்பட்டுள்ளனர் #வேதநாயகன் #தண்டனைக்குரிய