புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சாலை விதிமீறல் அபராதங்கள் பல மடங்கு உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகமாக ஏற்படும் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், விதிமீறலில் ஈடுபடும் வாகன சாரதிகளுக்கு அபராதத் தொகையைப் பல மடங்கு உயர்த்த வழிவகுக்கும் மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் கடந்த 23ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, இம்மசோதா மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியால் மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், இறுதிகட்ட ஒப்புதலுக்காக இந்தியக் குடியரசுத் தலைவரிடம் அனுப்பப்படும்.
இந்த மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் புதிய விதிகள் அமுலுக்கு வந்துள்ளன. அந்தவகையில் சாரதி உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டினால் முன்னர் 500 ரூபாவாக இருந்த அபராதம் தற்போது 5,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் 1,000 ரூபாய் அபராதமும் வாகனத்தை விபத்து ஏற்படுத்துவது போல ஓட்டினால் 5,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.
காப்பீடு இல்லாமல் வண்டி ஓட்டினால் 2,000 ரூபாய் அபராதம். பொது விதிமுறைகளை மீறும்போது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க இம்மசோதா வழிவகை செய்கின்றதுடன் குடிபோதையில் வண்டி ஓட்டினால் 10,000 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #மோட்டார் வாகன #திருத்த மசோதா #நிறைவேற்றம் #அபராதங்கள் #உயர்வு