உறுதியான அரசியல் தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால், தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. இருக்கின்ற தலைமைத்துவங்களை வலுப்படுத்துகின்ற நிலைமையைக் கடந்துள்ளதாகவே பதிதாக முளைக்கின்ற பிரச்சினைகள் கோடி காட்டுகின்றன.
தமிழ் மக்களைப் பிரதிநித்துவப்படுத்துவதாகக் கூறுகின்ற தலைமைகளும், தங்களுக்குள் ஒன்றிணைந்து ஓரணியாகத் திகழ வேண்டும். அந்தத் தலைமைகள் ஒரு குரலில் பேச வேண்டும். தங்களுடைய அரசியல் நிலைமைகளை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். பிரச்சினைகளுக்கு உறுதியானதோர் அரசியல் சக்தியாக முகம் கொடுத்து அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
ஆனால் தமிழ் மக்களின் அந்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் சிதைவடைந்து செல்வதையே காண முடிகின்றது. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்கான வழித்தடத்தில் அந்தத் தலைமைகள் உறுதியாக அடியெடுத்து வைப்பதாகத் தெரியவில்லை. அந்த செல்நெறி குறித்து, இதய சுத்தியுடன் மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தி சிந்திப்பதாகவும் தெரியவில்லை.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால், மக்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான வகையில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் அமையவில்லை. கூட்டமைப்புத் தலைமையின் தந்திரோபாயச் செயற்பாடுகள் என கூறப்பட்ட அரசியல் நகர்வுகள் மேலும் மேலும் பிரச்சினைகளுக்கு உரமூட்டினவே தவிர, பிரச்சினைகளைக் குறைப்பதாக அமையவில்லை.
குறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு என்ற நகர்வை தந்திரோபாய செயற்பாடாகச் சித்தரித்து, அதன் மூலம் அரசியல் தீர்வு காணப்படும் என்று மக்களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட்டது, ஆனால் அந்த நம்பிக்கையை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்வதற்குரிய சரியான வழிமுறைகள் கையாளப்படவில்லை.
மாயத் தோற்றம்
முன்னெடுக்கப்பட்ட நகர்வுகளும், ஏமாற்றத்தையே அளித்துள்ளன. யுத்த மோதல்களின்போது இடம்பெற்ற குற்றச் செயல்கள், இழைக்கப்பட்ட அநீதிகள் என்பவற்றுக்கு நீதி கிடைக்கும். அதற்கு சர்வதேசத்தின் ஆதரவு கிட்டியுள்ளது. சர்வதேசத்தின் உதவியோடு நீதியை நிலைநாட்டி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும் என்று பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், அந்த நகர்வுகள் அனைத்தும் வெறுமனே அரசியல் பிரசாரச் செயற்பாடுகள் என்ற எல்லையைக் கடக்கவில்லை.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணைகளுக்கு, நல்லாட்சி அரசாங்கம் தந்திரோபாய ரீதியில் அனுசரணை வழங்கியது. அந்தப் பிரேரணைகளை நிறைவேற்றி அவற்றின் ஊடாக பொறுப்பு கூறுகி;ன்ற கடப்பாட்டை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தது.
ஐநா மனித உரிமைப் பேரவைக்கு வழங்கப்பட்ட அரசாங்கத்தின் இந்த அனுசரணையும் உறுதிமொழியும், ஐநாவும், சர்வதேசமும் பாதிக்கப்பட்ட தரப்பாகிய தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன என்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவதற்கே உதவியிருந்தன.
உறுதியளித்தவாறு பொறுப்பு கூறலுக்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உரிய முறையில் மேற்கொள்ளவில்லை. மாறாக மனித உரிமைகள் பேரவையில் அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கு முரணான வகையில் அவற்றை மறுத்துச் செயற்படுகின்ற ஒரு நிலைப்பாட்டையே அரசாங்கம் எடுத்திருந்தது.
மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பவற்றுக்கு சர்வதேச தரத்திலான விசாரணைகளை நடத்துவதாக ஒப்புக்கொண்ட போதிலும், பின்னர், அதனை மறுத்து, உள்ளுர் விசாரணைகளே நடத்தப்படும் என்று அரசு அடித்துக் கூறிவிட்டது.
பிரேரணையில் முன்வைத்த ஆலோசனைகளின்படி சர்வதேச நீதிபதிகள் விசாரணையாளர்களை உள்ளடக்க முடியாது. கலப்பு நீதிப் பொறிமுறையையும் உருவாக்க முடியாது. உள்ளுர் பொறிமுறையின் கீழேயே விசாரணைகள் நடத்தப்படும் என்ற தனது நிலைப்பாட்டை அரசு தெளிவாக ஐநாவுக்கும் சர்வதேசத்திற்கும் அறிவித்துவிட்டது.
கிடப்பில் போடப்பட்டுள்ள பொறுப்பு கூறும் செயற்பாடு
இத்தகைய ஒரு முரண்பாடான நிலைப்பாட்டிலும், ஐநா பிரேரணைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் கோரியிருந்த கால அவகாசத்தை வழங்குவதற்கு தமிழ் மக்கள் சார்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருந்தது. ஒரு தடவையல்ல. இரண்டு தடவைகள் நிபந்தனைகளின்றி இந்த கால அவகாசம் வழங்கப்பட்டது.
கால அவகாசம் வழங்குவதனால் எந்தவித நன்மைகளும் ஏற்படப் போவதில்லை. பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை அரசாங்கம் நேர்மையாகக் கடைப்பிடிக்கப் போவதில்லை என்பதைப் பலதரப்பினரும் எடுத்துக் கூறியிருந்தார்கள். அரசாங்கத்தின் போக்கில் இதனை அனைவரும் உணரக் கூடியதாக இருந்தது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடமும் இந்த கருத்து நிலவியது. இதனால் அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படக் கூடாது என்ற நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் எல்லாவற்றையும் மீறி, நிலைமைகளை நன்கு உணர்ந்திருந்த போதிலும், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் போக்கிற்கு இணங்கி கால அவகாசத்தை வழங்குவதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பச்சை விளக்கைக் காட்டி இருந்தது. ஆனால் இறுதியில் காலத்தைக் கடத்தும் செயற்பாட்டிலேயே அரசாங்கம் கண்ணும் கருத்துமாக இருந்தது. வழங்கப்பட்ட கால அவகாசத்தை பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு சரியான முறையில் அது பயன்படுத்தவில்லை.
இதனால் பொறுப்பு கூறுகின்ற அரசாங்கத்தின் உறுதி மொழிகள் இந்த ஆட்சியின் காலத்தில் நிறைவேற்றப்பட மாட்டாது என்ற கசப்பான உண்மை இப்போது நிறுவப்பட்டிருக்கின்றது. உறுதிமொழிகளைக் காற்றில் பறக்கவிடுவதற்கு இரண்டு காரியங்கள் அரசாங்கத்திற்கு சாதகமாக அமைந்துவிட்டன.
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் எழுந்த அதிகாரப் போட்டியின் விளைவாக 2018 செப்டம்பர் மாதம் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்து மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் புரட்சி முதலாவது விடயம்.
இதனால் ஏற்பட்ட மோசமான அரசியல் நெருக்கடியும், அரசாங்கமே இல்லாத ஓர் இக்கட்டான சூழலும் ஏற்பட்டிருந்தது. இந்த நிலைமையை நிவர்த்தி செய்வதற்கு நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலைமை ஜனநாயகத்தை நிலைநிறுத்த விரும்பியவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. அந்த அரசியல் நெருக்கடிகள் தணிந்தவுடன் நிலைமை சீரடையவில்லை.
இரண்டாவது விடயமாகிய உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட திட்டமிட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நாட்டையே உலுப்பி அரசியல் போக்கையும் திசைமாற்றிவிட்டது. இந்தத் தாக்குதல்களின் மூலம் உருவாகிய சர்வதேச பய்ஙகரவாதத்தை முறியடித்து, தேசிய பாதுகாப்பை பலப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் அவசியமான நடவடிக்கைகளில் அரசு தீவிர கவனம் செலுத்த நேரிட்டது.
தொடரும் திசைமாறிய நிலைமைகள்
பிரச்சினை அத்துடன் முற்றுப் பெறவில்லை. குண்டுத் தாக்குதல்கள் நடைபெறப்போவதாக முன்கூட்டியே அரச தரப்பினருக்குத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், தடுத்திருக்கக் கூடிய அளவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பாதுகாப்புத் தரப்பினர் தவறிழைத்திருந்தனர். இந்தத் தவறு குறித்து விசாரணைகளை நடத்தி உண்மை நிலைமைகளைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய அவசியமும் கட்டாயத் தேவையும் அரசுக்கு எழுந்திருந்தது.
விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான யுத்த மோதல்கள் 2019 ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, அரசாங்கம் கூறுவதைப் போன்று நாட்டில் பயங்கரவாதம் இல்லாமல் ஒழிக்கப்பட்டிருந்த போhதிலும், தேசிய பாதுகாப்புக்கு அதிமுக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கப்பட்டிருந்தன.
ஓழிக்கப்பட்ட பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கக் கூடும். இராணுவ ரீதியாக மௌனிக்கச் செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் மீண்டும் எழுச்சி பெற்றுவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பிலேயே அரசாங்கமும், அரச படைகளும் மூழ்கிக் கிடந்தன. புலிப் பயங்கரவாதமும், புலிகளின் எழுச்சியும் நிகழ்ந்துவிடக் கூடாது. அதற்கான சந்தர்ப்பம் உருவாகிவிடக் கூடாது என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீதும், அவர்களின் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாடுகள் மீதும் கண்கொத்திப் பாம்பாக அரச படைகள் கண்காணித்திருந்ததே தேசிய பாதுகாப்புச் செயற்பாடாக இருந்தது.
ஆனால், விடுதலைப்புலிகளைப் பலமிழக்கச் செய்வதற்காகத் தமிழ்த்தரப்பாகிய முஸ்லிம் இளைஞர்களைப் பயன்படுத்திய இராணுவத்தினர், அந்த வழியின் ஊடாக இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் நாட்டில் உருவாகியதையும், அது உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பூதாகரமாக வெடித்துக் கிளம்புவதற்காகக் கனிந்திருந்ததையும் கவனிக்கவோ கண்காணிக்கவோ தவறிவிட்டனர்.
அது மட்டுமல்லாமல், உயிர்த்த ஞாயிறன்று தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற முன்னெச்சரிக்கை உறுதியான முறையில் முன் கூட்டியே வழங்கப்பட்டிருந்த போதிலும், தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பான தரப்பினரும், பயங்கரவாதம் மீண்டும் தலையெடுப்பதற்கு இடமளிக்கக் கூடாது என்று தமிழ் மக்களை நோக்கி அடிக்கடி போதனை செய்து வந்த பேரின அரசியல்வாதிகளும், அரச தலைவர்களும்கூட, இந்த இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தின் எழுச்சியைக் கண்டுகொள்ளவில்லை. கண்டு கொள்ளத் தவறிவிட்டார்கள். தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்கு இந்த நிலைமைகளும் முக்கிய காரணமாகியுள்ளன.
இத்தகைய நிலைமையில்தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒத்திவைப்புப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து, அரசு விரைவாக அரசியல் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. தமிழ் மக்களுக்கு அதி உச்ச அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தப் பிரேரணையின் மூலம் கோரியுள்ளார்.
நாட்டில் கொதி நிலையை ஒத்ததோர் அரசியல் நிலைமையே காணப்படுகின்றது. அரசியல் உறுதிப்பாட்டைக் காண முடியவில்லை. கொண்டதே கோலம். கண்டதே காட்சி என்ற நிலைமையிலேயே அரசியல் தலைவர்களும், அரசியல் கட்சிகளும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இரு வழிப் போக்கு
இத்தகைய ஒரு நிலையில் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் அரசியல் தீர்வுக்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கூட்டமைப்பு கோரியிருக்கின்றது. இது செவிடன் காதில் ஊதிய சங்காகவே ஆட்சியாளர்களின் செவிகளிலும் கவனத்திலும் சென்றடைந்திருக்கின்றது.
அரசியல் தீர்வுக்கான புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கொண்டுள்ள அக்கறையை அரச தரப்பினர் அதன் உண்மையான நோக்கில் புரிந்து கொள்ளவிலலை. புரிந்து கொள்ள மறுத்துள்ளார்கள் என்றே கூற வேண்டும். ஏனெனில் கூட்டமைப்பின் ஒத்திவைப்புப் பிரேரணை கொண்டு வரப்பட்டு, அதில் கூட்டமைப்பின் தலைவர் முக்கிய உரையாற்றியபோது சபையில் கோரம் இருக்கவில்லை என்று இரண்டு தடவைகள் மணி ஒலிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.
இந்தப் பிரேரணையின்போது அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் போன்ற விடயங்களுக்கு அரச தரப்பில் பதிலளிப்பதற்குக்கூட எவரும் இருக்கவில்லை. அந்த வகையிலேயே அதி முக்கியத்துவம் மிக்க கூட்டமைப்பின் ஒத்திவைப்புப் பிரேரணை அரச தரப்பிடமும், ஏனைய பேரின அரசியல் தலைமைகளிடமும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
காலத்துக்கும் நிலைமைகளுக்கும் ஏற்ற வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய நகர்வுகளை மேற்கொள்வதற்கும், தந்திரோபாய ரீதியில் காய் நகர்த்தல்களை மேற்கொள்வதற்கும் கூட்டமைப்பு தவறிவிட்டது என்ற பொதுவான குற்றச்சாட்டு பலராலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இரு கட்சிகள் கூடி உருவாக்கிய இந்த நல்லாட்சியைப் பாதுகாத்து, அதன் ஊடாக காரியங்கைளச் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்ட கூட்டமைப்பின் தலைமை அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கின்ற சந்தர்ப்பங்களைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவி;ல்லை என்றும் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவற்றில் உண்மை இல்லை என்று முழுமையாகப் புறந்தள்ளிவிட முடியாது.
கூட்டமைப்பு நிலைமைகளைச் சரியாகக் கையாளத் தவறியதன் காரணமாகவே பாதிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சி பெற்று தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்தப் போராட்டங்களுக்கு உரிய அரசியல் தலைமைத்துவம் இல்லை. உரிய அரசியல் வழிநடத்தலும் இல்லை என்பது கவலைக்குரியது. பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு வழி. அவர்களின் அரசியல் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தலைவர்கள் வேறு ஒரு வழி என்ற இருவழிப் போக்கே தமிழர் தரப்பு அரசியலில் காணப்படுகின்றது.
பொறுப்பான செயற்பாடே அவசியம்
பெரும்பான்மையான தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தன்னளவில் ஓர் உறுதியான பலம்வாய்ந்த அரசியல் அமைப்பாகச் செயற்பட முடியவில்லை. பங்காளிக் கட்சிகளிடம் முரண்பாடு. பங்காளிக்கட்சிகள் தலைமையுடன் முரண்பாடு என்று முரண்பாடான அரசியல் போக்கிலேயே அது சென்று கொண்டிருக்கின்றது. இதனால் அந்தத் தலைமை மீது மக்கள் நம்பிக்கை இழக்கவும், அதன் காரணமாக தாங்களே தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு மாற்று வழியைத் தேடவும் தூண்டியுள்ளது.
மறுபுறத்தில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகளும், கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்களும்கூட மக்களின் உண்மையான அரசியல் நிலைமைகளைப் புரிந்து கொண்டு செயற்படுவதைக் காண முடியவில்லை.
பேரினவாதம், இனவாதம், மதவாதம் என்ற வழிகளின் ஊடாக தமிழ் மக்களையும் அவர்களின் வரலாற்று ரீதியான தாயகப் பிரதேசத்தையும் கபளீகரம் செய்கின்ற போக்கின் தீவிரத் தன்மையையும் ஆபத்தான போக்கையும் புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் அரசியல் செய்றாபடுகளை முன்னெடுப்பதாகத் தெரியவில்லை.
மாறாக மக்கள் மத்தியில் அரசியல் தலைமைகளாக உருவாக வேண்டும். அரசியல் தலைவர்களாகத் தலைநிமிர்த்த வேண்டும் என்ற அரசியல் பேராவலில் செயற்படுவதையே காண முடிகின்றது.
தமிழ் மக்கள் எத்தனையோ பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றார்கள். அரசியல் ரீதியாகவும் ஏனைய வழிமுறைகளிலும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கூட்டமைப்பு தவறியிருக்கலாம். தவறிழைத்திருக்கலாம். அதனால் மக்கள் வெறுப்படைந்து மாற்று வழிகளில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஆனால் மக்கள் மீது உண்மையான பரிவும் பற்றும் கொண்டுள்ள, சமூக, அரசியல் பொறுப்புணர்வைக் கொண்டுள்ளவர்கள் கட்சி ரீதியான அரசியலுக்கு அப்பால் பல்வேறு வழிகளின் ஊடாக மக்கள் முன்னால் உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். அதன் ஊடாக அரசாங்கத்திற்கு அழுத்தத்தைப் பிரயோகித்து தீர்வு காண்பதற்கான வழிமுறைகளில் செயற்பட வேண்டும். அப்போது பிரச்சினைகளைக் குறைக்க முடியும். மக்கள் மனங்களில் இடம் பிடித்து அரசியல் ரீதியாக உறுதியான தலைமைத்துவத்தைப் பெறவும் முடியும்.
ஜனாதிபதி தேர்தலையும் அதனையடுத்து பொதுத் தேர்தலையும் நாடு எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் தீவிரமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டியது அவசியம். ஒருவருடன் ஒருவர் மோதிக் கொள்வதிலும், எதிரெதிர் விமர்சனங்களை முன்வைத்து மக்களுடைய ஆதரவைப் பெற்றுவிடலாம் என்று காலத்தைப் போக்குவதிலும் பலன் கிட்டப் போவதில்லை என்பதை உணர்ந்து செயற்பட முன்வர வேண்டும். #யதார்த்தத்தை #புரியாத நிலை #தமிழ்மக்கள் #நல்லாட்சி #ஐநா