ரஸ்யாவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. அணு ஆயுத பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்கா மற்றும் ரஸ்யாவுக்கிடையே கடந்த 1987-ம் ஆண்டு கையெழுத்தான இந்த ஒப்பந்தம் நிலத்தில் இருந்து ஏவப்படும் சிறிய மற்றும் நடுத்தர தூர அணு ஆயுத ஏவுகணைகளை இரு நாடுகளும் பயன்படுத்த தடை விதிக்கிறது.
கடலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை இது கட்டுப்படுத்தாது என்பதுடன் இரு நாடுகளும் எதிர்த்தரப்பின் ஆயுதங்களை சோதிக்க இந்த ஒப்பந்தம் அனுமதி வழங்குகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் இருநாடுகளில் இருந்த சுமார் 2,700 ஏவுகணைகள் 1991-ம் ஆண்டு அழிக்கப்பட்ட நிலையில் கடந்த 2002-ம் ஆண்டு கண்டம்விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது.
இதனை தொடர்ந்து இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றையொன்று சுற்றம் சுமத்தி வந்த நிலையில் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா நேற்று முழுமையாக வெளியேறியுள்ளது. ஐ.என்.எப். ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை தொடர்ந்து, அந்த ஒப்பந்தம் முற்றிலும் செயல் இழந்துவிட்டதாக ரஸ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை புதிய ஆயுத போட்டிக்கு வழிவகுக்குமோ என்னும் அச்சம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது #ரஸ்யா #அணு ஆயுத #ஒப்பந்தத்திலிருந்து #அமெரிக்கா #வெளியேற்றம்