யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இரு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் பேருந்து நடத்துனர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தையடுத்து தாக்குதலை நடத்திய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.
“பேருந்து நிலையத்துக்குள் அழகுசாதனப் பொருள்களை விற்பனை செய்பவர் சிலர் தமது வாகனத்தை பேருந்து நிலையத்துக்குள் கொண்டு செல்ல முற்பட்டனர். அதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் அனுமதிக்கவில்லை.
அதனால் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் அவர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அதனையடுத்து அங்கு கூடிய இ.போ.ச சாரதிகள், நடத்துனர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு ஆதரவாக நின்றனர்.
அதனால் வியாபாரிகள் சிலர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் சேர்ந்து கடைகளுக்குள் இருந்த கம்பிகள், கத்தரிக்கோல் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து பாதுகாப்பு உத்தியோகத்தரையும் நடத்துனரையும் கண்மூடித்தனமாகத் தாக்கினர்.
சம்பவத்தையடுத்து படுகாயமடைந்த நடத்துனர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். தாக்குதலை நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன” என காவற்துறையினர் தெரிவித்தனர்.
-மயூரப்பிரியன்