உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகவுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை நடத்தி நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் நியமிக்கப்பட்ட பிரதி சபாநாயகர் தலைமையிலான நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் விசாரணைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன.
அதன்படி இன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ள தெரிவுக்குழு விசாரணைகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன, அமைச்சர்களான சாகல ரத்நாயக மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று கூடவுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் அமர்வுகளுடன் பிரதான விசாரணைகள் அனைத்துமே முடிவுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் இந்த மாதம் நடுப்பகுதியில் தெரிவுக்குழு விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவருவதுடன் எதிர்வரும் 23 ஆம் திகதி அறிக்கையை சமர்ப்பிக்க முடியும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.