மயூரப்பிரியன்
காசோலை மோசடி வழக்கொன்றில் முறைப்பாட்டாளருக்கு சாதகமாக காவற்துறையினர் வாக்கு மூலம் எழுதியமை எதிரி தரப்பு சட்டத்தரணியின் குறுக்கு விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்.நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் காசோலை மோசடி தொடர்பிலான வழக்கொன்றின் காவற்துறை சாட்சியத்தின் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அதன் போதே அவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளர் இரண்டு காசோலைகளை பெற்றுக்கொண்டே எதிரி தரப்பினருக்கு பணம் கொடுத்தேன் என கூறி நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, காவற்துறை சாட்சியத்தினை எதிரி தரப்பு சட்டத்தரணி குறுக்கு விசாரணை செய்தார். அதன் போது முறைப்பாட்டாளரிடம் மூன்று காசோலைகளை கொடுத்தே பணத்தினை எதிரிகள் பெற்றுக்கொண்டார்கள் என முறைப்பாட்டாளர் வாக்கு மூலம் அளித்தார் என சாட்சியம் அளித்தார்.
அதன் போது எதிரி தரப்பு சட்டத்தரணி இரண்டு காசோலைகளை பெற்றே பணத்தினை கொடுத்தேன் என முறைப்பாட்டாளர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார் என சுட்டிக்காட்டி காவற்துறை சாட்சியத்தினை நோக்கி கேள்விஎழுப்பினார். அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளின் போது காவற்துறை சாட்சியம் முன்னுக்கு பின் முரணான சாட்சியங்களை அளித்துள்ளார்.
குறித்த சாட்சியங்கள் தொடர்பில் எதிரி தரப்பு சட்டத்தரணி நீதிவானுக்கு சுட்டிக்காட்டி , முறைப்பாட்டாளருக்கு சாதகமாகவே காவற்துறையினர் வாக்கு மூலத்தை பதிந்துள்ளனர் என்பதனையும் சுட்டிக்காட்டினார். அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.