கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக விமான ஓடுதளத்தில் தண்ணீர் சூழ்ந்ததால் கொச்சி விமான நிலையம் நள்ளிரவு வரை மூடப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு கனமழைக்கான சிகப்பு எச்சரிக்கை விடப்பட்டது. இதன் காரணமாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதேவேளை இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக வடகர்நாடகம் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த மழை வெள்ளத்துக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். மேலும் மீட்பு பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் கர்நாடகத்தின் பல பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.