திருகோணமலையில் 2006 ஜனவரியில் விசேட அதிரடிப்படையினரால் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்ற 5 தமிழ் மாணவர்களின் கொலை தொடர்பாக மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு இலங்கையின் சட்டமா அதிபர் எடுத்திருக்கும் தீர்மானத்தை வரவேற்றிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, விசாரணைகள் பயனுறுதி உடையவையாக இருக்க வேண்டுமானால் சில சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் கூறியிருக்கிறது.
இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய வழக்கின் குற்றஞ்சாட்டப்பட்ட விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 13 வீரர்களை, அவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லையென்ற காரணத்தைக் கூறி திருகோணமலை மேல் நீதிமன்றம் விடுதலை செய்தமையை அடுத்தே இந்த மீள் விசாரணைத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும், இந்தக் கொலைகள் தொடர்பான நீதி கிடைக்கப்பெறுவதற்கும் முழுமையானதும், கண்டிப்பானதும், பயனுறுதி உடையதுமான பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் என்பதையும் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30(1) தீர்மானத்தின் பிரகாரம் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் என்பன மீறப்பட்ட சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளை உள்நாட்டு நீதிமன்ற முறைமை ஒன்றினூடாக அல்லது விசேட சட்டவாதி ஒருவரை உள்ளடக்கிய நீதிமன்றப் பொறிமுறை ஊடாக விசாரணை செய்து கொலைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச்செய்வதற்கு சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கம் கடப்பாடு உடையதாக இருக்கின்றது என்று கூறியிருக்கும் மன்னிப்புச்சபை, திருகோணமலை மாணவர்கள் கொலைகள் குறித்து பயனுறுதியுடைய முறையில் விசாரிப்பதற்கும், பொறுப்புக்கூற வைப்பதற்குமாக சாட்சிகள் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் தற்போது வசிக்கின்ற நாடுகளிலிருந்து பரஸ்பர சட்ட உதவிகளைப் பெறுவதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.
திருகோணமலையில் 5 மாணவர்களினதும் சடலங்களைப் புகைப்படம் எடுத்த பத்திரிகையாளரான சுப்ரமணியம் சுகிர்தராஜன் சம்பவத்திற்கு ஒருசில வாரங்கள் கழித்து கொலை செய்யப்பட்டார் என்பதும், கொலையுண்ட மாணவர்களில் ஒருவரான ரஜிஹரின் தந்தையாரான டாக்டர் கே.மனோகரன் கொலை அச்சுறுத்தல்களை அடுத்து நாட்டைவிட்டுத் தப்பியோட நிர்பந்திக்கப்பட்டார். இந்த வழக்கில் சாட்சியமளிக்கும் பட்சத்தில் தான் பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தை அவர் தொடர்ந்தும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொலையுண்ட ஏனைய மாணவர்களின் குடும்பத்தவர்களும் சம்பவத்தில் உயிர் தப்பிய இளைஞர்களும் கூட இலங்கையை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டார்கள். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களாலும், சாட்சிகளாலும் வெளிப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அச்சங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், இலங்கைக்கு வெளியே இருக்கும் சாட்சிகளும் பாதிக்கப்பட்டவர்களும் விசாரணைகளில் பங்கேற்பதற்கு வசதி செய்வதற்காக 2015 ஆம் ஆண்டின் குற்றச்செயல் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களின் பாதுகாப்பிற்கான சட்டத்தில் இலங்கை அரசாங்கம் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் மன்னிப்புச்சபை கூறியிருக்கிறது.
சாட்சிகளும், பாதிக்கப்பட்டவர்களும் தற்போது வசிக்கின்ற வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் தூதரகங்களிலிருந்து சாட்சியளிப்பதற்கு வசதி செய்வதற்கும் அப்பால் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யக்கூடியதாக அந்தச் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் மன்னிப்புச்சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.