இலங்கையின் புதிய இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை ஐக்கியநாடுகளின் அமைதிப்படையில் இலங்கை படையினர் பணியாற்றுவதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட் தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையினால் யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வா இலங்கையின் புதிய இராணுவதளபதியாக நியமித்தமை குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சவேந்திர டி சில்வா மற்றும் அவரது படையணிக்கு எதிராக சர்வதேச சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் ஆகியவற்றினை மீறியதாக பாரதூரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இலங்கையின் இராணுவதளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சவேந்திர சில்வாவிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமையானது பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான இலங்கையின் உறுதிமொழிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது எனவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் இது கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இலங்கையின் இராணுவ தளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் மிகுந்த கவலையடைவதாக அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், நேற்றையதினம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஐக்கிய நாடுகள் சபையினாலும் ஏனைய அமைப்புகளினாலும் ஆவணப்படுத்தப்பட்ட அவருக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள், பாரதூரமானதும் நம்பகரமானவையும் ஆகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #இராணுவதளபதி #சவேந்திர டி சில்வா #ஐ.நா #அமெரிக்கா #கண்டனம்