மக்களுக்காக அவசர உதவிக்கு இருக்கின்ற அவசர காவற்துறை சேவை தமிழ் மக்களுக்கு பாரபட்சமாக செயல்படுகிறதா என்ற ஐயப்பாடு எழுகின்றது என அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகளின் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சசிதரன் தெரிவித்தார். நேற்று புதன்கிழமை (21) மாலை காரைதீவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர்.
கடந்த 9ம் திகதி தாம் நித்திரையில் இருந்த போது இரவு 2 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் சம்மாந்துறை காவற்துறையில் இருந்து வந்திருப்பதாக கூறி ஜன்னல் கதவு போன்றவற்றை பலமான முறையில் தட்டினார்கள். ஒருவரை கொல்ல வரும் விதத்தில் வருபவர்கள் செய்ய நடந்து கொள்வது போல் நடந்து கொண்ட இந்த இனந்தெரியாத நபர்களின் மிலேச்சத்தனமான செயற்பாட்டின் பிரகாரம் எமது உயிரைப் பாதுகாக்க அன்றைய தினமே உடனடியாக தான் அவசர காவற்துறைப் பிரிவினருக்கு நான் தகவல் கொடுத்திருந்தேன்.
தனது விலாசம் தனது தொலைபேசி இலக்கம் எனது முழு பெயர் போன்றவற்றை மேலதிக விவரங்களை தன்னிடம் கேட்டுப் பெற்றுக் கொண்ட அவசர காவற்துறை பிரிவினர் இரண்டு கிழமைகளில் ஆகியும் கூட இது சார்ந்து எதுவித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் அச்சத்தின் காரணமாக தற்போது உறவினர்களின் இல்லத்தில் தற்காலிகமாக தங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஏனெனில் தொடர்ந்து தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவருகின்ற சூழ்நிலையால் தாங்கள் இடத்தை மாற்றி மாற்றி தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனது உறவினர்கள் பாதிக்கப்படுகின்றனர். தங்கள் வீட்டில் காவற்துறை என தெரிவிப்பவர்கள் தொடர்ந்து வருகை தந்து விசாரணை செய்வதால் அச்சுறுத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் சம்பவம் நடைபெற்றமை குறித்து போலீசார் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.இந்த தகவலை தெரிவிப்பதற்காக கல்முனை மனித உரிமை ஆணையத்துக்கு சென்று விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. அவ்வேளைகாவற்துறையிடம் சென்று புகார் அளித்த முறைப்பாடு பிரதியினை காட்டுமாறும் அதன் பின்னரே மனித உரிமை ஆணையத்தில் புகார் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்தனர். ஆனால் அவ்வேளையில்தான் அவசர காவற்துறை பிரிவினர் நான் கொடுத்த புகாரினை சம்மாந்துறை காவற்துறை பிரிவிற்கு தெரிவிக்கவில்லை என தனக்கு அறியக்கிடைத்தது. தான் அவசர காவற்துறை பிரிவிற்கு முறைப்பாட்டினை தெரிவித்ததன் குரல் பதிவு தன்னிடம் உள்ளது. தனது விடயத்தில் கவனம் செலுத்தாத சம்பவத்தை காவற்துறை அதிபருக்கு ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்துவதாகவும், ஒருவேளை மக்களுக்காக அவசர உதவிக்கு இருக்கின்ற அவசர காவற்துறை சேவை தமிழ் மக்களுக்கு பாரபட்சமாக செயல்படுகிறதா என்ற ஐயப்பாடும் எழுகின்றது என தெரிவித்தார்.
பாறுக் ஷிஹான்