ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நான்காயிரம் ஏக்கர் காணிகளை விட இன்னும் விடுவிக்கப்ட வேண்டிய பொது மக்களின் காணிகள் தொடர்பாக, அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு விடுவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பேச்சுவார்த்தை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இறுதி நாள் அன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது. இதேவேளை பருத்தித்துறை தறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வும், சுத்தமான குடிநீர் விநியோகத்திட்டங்களும் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் நேற்று மாலை வரையில் சுமார் ஐந்து இலட்சம் பேர் நன்மை அடைந்துள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி விசேட செயலணியுடன் இணைந்து முன்னெடுக்கும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் அபிவிருத்தி வேலைத் திட்டத்தில் கடந்த இரு தினங்களிலும் ஆயிரத்து 293 திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இத்திட்டங்கள் 15 பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள 435 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் எதிர்வரும் 30ம் திகதி வரையில் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நான்காயிரத்து 400 நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன. இவற்றுள் 23ம் திகதி முதல் நாளாந்தம் யாழ்.மாவட்டத்தில் மக்கள் விழிப்பூட்டப்பட்டு வருவதுடன் நடை முறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுற்றாடல், பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சிறுவர், மகளிர், முதியோர், விசேட தேவையுடையோர் பராமரிப்பு நிகழ்ச்சித் திட்டங்களும், தொழில் முயற்சிகள், வேலைவாய்ப்பு, நிதி மற்றும் வங்கி நடவடிக்கைகளும், வட மாகாணத்திற்கு ஏற்றவாறு மேற்கொள்ள இத்திட்டம் வழிவகுக்கின்றது. கிராம சக்தி, ஸ்மாட் ஸ்ரீலங்கா, சுத்தமான குடிநீர், சிறுநீரக நோய் நிவாரணம் என்பன உட்பட விவசாய, மீன்பிடி, கைத்தொழில் அபிவிருத்திகளுக்கும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டம் பாரிய பங்களிப்புக்களை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)