மட்டக்களப்பானது, தூரநோக்கு பார்வையைக் கொண்ட கலை ஆசிரியரான கலாநிதி சி. ஜெயசங்கரின் முயற்சியினால் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் கலை காட்சி தோற்றத்துடன் கலை கற்பித்தலில் அபிவருத்தியை அனுபவித்துவருகின்றது. கடந்த வருடங்களில் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் இளம் தலைமுறைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கொழும்பு மற்றும் வெளிநாட்டுக்கலைஞர்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் திறக்கப்பட்டன. மட்டக்களப்பின் அபிவிருத்தியை கண்டுபிடித்து தீர்த்த கலைஞர் பட்டறையானது சமீபத்தில் கலைமானி பட்டம்பெற்ற 6 கலைஞர்களின் 14 ஓவியங்கள் மற்றும் 1 ஸ்தாபனக்கலையைக் கொண்ட 15 கலைப்படைப்புக்களை காட்சிப்படுத்தும் ஒழுங்கமைப்பினை மேற்கொண்டது. இவை சிறந்த கலைப்படைப்புக்கள் அல்லது மட்டக்களப்பு சுவாமி விபுலானாந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் சிறந்த இளம் கலைஞர்களை நாங்கள் உரிமை கோரவில்லை, பதிலாக இந்த காட்சிப்படுத்தலினூடாக சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இளம் கலைஞர்களினால் வெளிப்படுத்தப்பட்ட பன்முகத்தன்மை, உணர்ச்சிநிலை, பாணிரீதியான உத்திநுட்பம் மற்றும் கட்டமைப்பு போன்றவற்றை காட்சிப்படுத்தலை முயற்சியாகக் கொண்டுள்ளது.
ராசையா நதீஸ் – 1980ம் ஆண்டுகளிற்கு பிற்பாடு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக நடைபெற்ற அடக்கு முறைகள் அழிவுகள் தொடர்பானதாகவும் தற்காலங்களில் அவர்களின் மனதளவில் காணப்படுகின்ற தழும்புகள் நினைவுகள் என்பவற்றை வெளிக் கொணர்வதாகவும் ‘தடயம்’ எனும் தலைப்பின் கீழ் எனது ஓவியங்கள் அமையப் பெற்றுள்ளன. குறிப்பாக எனது பிரதேசத்தில் எனது உறவுகள் பட்ட அவல நிலையினையும் தற்காலங்களில் அவர்களுடன் மனதளவில் பகிர்ந்து கொண்ட விடயங்களும் இன்றும் எனது சமூகத்தினருக்கும் எதிர்வரும் சந்ததியினருக்கும் தெரியப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் ஆழ்மனதில் பதியப்பட்ட விடயங்கள் உள்ளுணர்வு சார்ந்த தடயங்களாகக் காணப்படுகின்றன. எனது ஓவிய மேற்பரப்பாக 3½ அடி வட்ட தளத்தைத் தெரிவு செய்துள்ளேன். இந்த வட்ட வடிவத்தினூடாக குறிப்பிட்ட இனமானது சுழற்சி முறையில் அடக்கு முறைகளுக்கு உட்பட்டுக் கொண்டே இருந்தது எனவும், இனியும் இவ்வாறான அடக்கு முறைகள் இடம் பெற்றுக் கொண்டே இருக்கும் என்பதனையும் குறிப்பாகக் காட்டியுள்ளேன்.
காலிதீன் பாதிமா ஹுஸ்னா – கடந்து முடிந்த ஒரு சில நினைவுகளை வெளிப்படுத்தும் வகையில் எனது கலைப்படைப்புக்கள் அமைகின்றன. அனைவரின் வாழ்விலும் நினைவுகள் என்பது மறக்க முடியாத ஒன்றாகக் காணப்படுகின்றது. சில நினைவுகள் கனவுகளுக்குள்ளால் உதிர்ந்து போன ஒன்றாகக் காணப்படுகின்றது. என்னுடைய வாழ்வில் கடந்த கால நினைவுகள் மீண்டும் மீண்டும் ஞாபகத்திற்கு வருவதை நினைவுபடுத்தும் முகமாக சமகாலத்திற்கு ஏற்ற வகையில் எனது கலைப்படைப்பில் ரோஜா மலர் பிரதான கருப்பொருளாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனுடைய இதழ்கள் ஒவ்வொன்றும் ஒன்றிணைந்து ஒவ்வொரு நினைவுகளைத் தருவதாகக் காணப்படுகின்றது.
ஜெ.திலான்ந் – அன்பின் உருவம் எத்தகையது என்ற குழப்பத்தின் தேடலே உயிருள்ள, மென்மையான, இரசிக்கத்தக்க மீன் உருவாக வெளிப்பட்டது. அன்பினால் மனிதன் அடையும் உணர்வின் உச்சநிலையே இங்கு கொடூரம் என்ற தொனிப்பொருளில் மென்னையின் உருவான மீனின் ஊடாக கொண்டுவரப்பட்டுள்ளது. அன்பின் ஆதிக்கம் அதிகரிக்கும் போதும், குறைவடையும் போதும் அங்கு கொடூர உணர்வுகள் வெளிக்கொணரப்படுகின்றன. அதே போன்றே மனிதனின் கடல் வேட்டையும், உலகமயமாக்கலின் தாக்கமும் அதிகரிக்கும் போதும் குறைவடையும் போதும் அதன் விளைவுகள் கொடூரமானதாகவே பிரதிபலிக்கப்படுகின்றது. எனவே அவை எதிர்மாறான தாக்கத்துடன், எதிர் வினையாக ஒன்றுக்கொன்று தாக்கம் புரிகின்றது. அதனை வெளிப்படுத்தும் படைப்பாக்கமாகவே எனது படைப்புக்கள் அமைந்துள்ளன.
முஹம்மத் அனஸ் சித்தி ஜெஸ்மின் – எனது வாழ்க்ககையில் பயணங்களினூடாக பிரிவுகளை சந்தித்துள்ளேன். எனவே எனது கலைப்படைப்புக்களில் வாழ்க்கையின் யதார்த்தங்களை பயணங்கள் தந்த அனுபவங்களின் ஊடாகவும் பயணத்திற்கும் வாழ்க்கைக்கும் இடைலான தொடர்பினை எடுத்துக் காட்டுவதன் ஊடாகவும் விமர்சிக்கிறேன். எனது ஓவியங்களில் அலங்கோலமான தூரிகைத் தடங்களை கொண்டு வருவதன் ஊடாக எனக்கான வெற்றிய உணர்கிறேன். இறுக்கத் தனமான, இருளில் அமிழ்ந்த தன்மையில் ஓவியங்களை வெளிப்படுத்த முயற்சிக்கின்றேன். வேகமாகவும், ஆழ்ந்த அவதானித்தலின் ஊடாகவும் எனக்கான ஓவியப் பாணியை கையாழ்கிறேன்.
அக்பர் அஸ்னா – இன்றைய சமூகச் சூழலில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி காணப்படுகின்றது. பெற்றோர் வேலைக்குச் சென்ற பின் பிள்ளைகள் மத்தியில் நிலவும் மனநிலையை வெளிப்படுத்துவதாக எனது படைப்புக்கள் அமைகின்றன. அதாவது அவர்கள் வேலைக்குச் சென்ற பின் பிள்ளைகள் மத்தியில் நிகழும் தனிமை, அவர்களுடைய மனநிலை, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அவர்கள் முகங்கொடுக்கும் சவால்கள் இவ்வாறான பல சந்தர்ப்பங்களை ஆராய்வதாக எனது ஓவியங்கள் அமைகின்றன. அந்தவகையில் தனிமைப்படுத்தப்பட்ட சிறு இதயத்தின் குரலாக அமைகின்ற இவ்வோவியங்கள் எனது வீட்டுச் சூழலில் நான் பெற்றுக் கொண்ட அனுபவத்தின் விளைவாக உருப்பெற்றுள்ளன. மேலும் இவ்வோவியங்களில் சிறு இதயத்தினை அவர்களுடைய விளையாட்டுப் பொருட்கள் மூலம் காட்டியுள்ளதோடு, பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதற்கான காரணத்தை ஆராய்வதாக மாடிப்படிகள் இவ்வோவியத்தில் இடம் பெற்றுள்ளன. தனிமைப்படுத்தப்பட்ட சிறு இதயங்களின் எதிர்ப்பார்ப்புக்களையும், வலிகளையும், சவால்களையும் எடுத்துக் காட்டுவதாக ‘தனிமைப்படுத்தப்பட்ட சிறு இதயம்’ எனும் தலைப்பில் எனது ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
பரராசசிங்கம் இந்துஸன் – 2009ம் ஆண்டு அதிகாரம் கொண்ட ஒரு இனக்குழு சிறுபான்மை இனத்தின் மீது மேற்கொண்ட ஆதிக்கத்தின் காரணமாக சிறுபான்மை இனம் குறிப்பிட்ட ஒரு நிலப்பகுதிக்குள் ஒடுக்கப்பட்டது. அந்தசந்தர்ப்பத்தில் இனக்குழுக்களின் பரஸ்பர வாழ்க்கை முறை மறைக்கப்படாத அந்தரங்க வாழ்க்கை முறையாக அமையத் தொடங்கியது. அக் காலகட்டத்தில் நெருக்கடிகளுக்கு மத்தியில் பெண்களின் அந்தரங்கங்கள் மறைக்கப்பட்டும் மறைக்கப்படாமலும் காணப்பட்டது. அச் சந்தர்ப்பத்தில் அந்த சூழலுக்குள் இருந்து வந்தவனாகையால் அங்கு நடந்த விடயங்களை கண்ணால் கண்டதனூடாக இவற்றை சமூகத்திற்கு வெளிப்படுத்தும் நோக்கில் எனது படைப்புக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த சமூகத்தில் வாழ்ந்தவர்கள் தமது அந்தரங்கங்களை மறைப்பதற்காக சில உத்திகளை கையாண்ட விதத்தினை இப்படைப்புக்களுக்கூடாக வெளிப்படுத்தியுள்ளேன்.