“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பரந்துபட்ட கூட்டணியை அமைத்து டிசம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் எமது வெற்றி வேட்பாளரை அறிவிப்போம். நாம் ராஜபக்ஸவை தனிமைபடுத்தவதோடு எமது வேட்பாளர் மைத்திரிபோலிருக்க மாட்டார்” என்று அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார். குளியாப்பிட்டியவில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “எமது வேட்பாளர் யார்? என எங்கு சென்றாலும் வினவுகின்றார்கள். நாம் பரந்து பட்ட கூட்டணியை அமைத்து கடந்த முறைபோன்று வெற்றிபெறும் வேட்பாளரை தக்க தருணத்தில் களமிறக்குவோம். ஆனால் மைத்திரிபால சிறிசேன போன்று அவர் இருக்கமாட்டார். நாட்டின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு அனைத்து சமூகங்களின் சார்பிலும் செயற்படும் ஒருவராகவே இருப்பார்.
மைத்திரியை நானும் முன்னின்று களமிறக்கினேன். அதன் பின்னர் அவரை ஏன் வேட்பாளராக நிறுத்தினீர்கள். அவரைப்பற்றி அறிந்திருக்கவில்லையா என்றெல்லாம் ஆயிரக்கணக்கான கேள்விகளை என்னிடத்தில் கேட்டுவிட்டார்கள். அவற்றுக்கு பதிலளித்து நானும் களைத்து விட்டேன். ஆகவே அவரைப்போன்ற வேட்பாளரை மீண்டும் களமிறக்கினால் என்னை மனநிலை சரியில்லாதவர் என்றே மக்கள் நினைப்பார்கள். நாம் சிறந்த வேட்பாளரை களமிறக்குவது உறுதியானது.
நாம் கூட்டணியை அமைத்து உரிய முறைமையில் டிசம்பர் 7ஆம் திகதிக்குள் வெற்றி வேட்பாளரை களமிறக்குவோம் என்றும் குளியாப்பிடி நகருக்கு எமது ஜனாதிபதியுடன் தான் மீண்டும் வருவோம். ராஜபக்ஸ யுகத்தில் நடைபெற்ற விடயங்களை நீங்கள் அறிவீர்கள். மீண்டும் அந்த யுகம் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது. ராஜபக்ஸ தரப்பினரை நாம் தனிமைப்படுத்துவோம். அதற்காக அனைத்து சக்திகளையும் ஒன்றிணைப்போம்” எனவு்ம அவர் இதன்போது தெரிவித்தார்.