ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்ஸிற் உடன்படிக்கை ஏற்படுவதை தடுக்க தேவையான சட்டத்தை நாடாளுமன்றத்தில் வெற்றி பெற செய்ய பிரித்தானிய அரசாங்கம் எடுத்த முயற்சி தோற்கடிக்கடிக்கப்பட்டுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த அதிருப்தியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் கட்டத்தில் இதனை தோற்கடித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதை தாமதப்படுத்தக் கோரும் இந்த மசோதா தொடர்பாக நாடாளுமன்ற பொதுஅவையில் நேற்றையதினம் நடைபெற்ற வாக்குப்பதிவில், இதற்கு ஆதரவாக 328 வாக்குகளும், எதிராக 301 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதனால் பிரித்தானியாவின் புதிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பிரெக்ஸிற் வாக்கெடுப்பில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததால் ஆளும் அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்திலிருந்து பிரெக்ஸிற்க்கு ஆதரவு தெரிவித்துவரும் பொரிஸ் ஜோன்சன், பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் உடன்படிக்கைக்கு ஆதரவிருந்தாலும் எதிர்ப்பிருந்தாலும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது உறுதி எனஅறிவித்திருந்தார்.
இந்த நிலையில், பிரெக்சிற்றை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தத்தில் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிலிப் லீ, லிபரல் டெமொக்ர்ஸி கட்சியில் இணைந்தமையினால் நாடாளுமன்றத்தில் பொரிஸ் ஜோன்சன் பெரும்பான்மையை இழந்துள்ளார். இதனை அடுத்து இங்கிலாந்தின் புதிய பிரதமரான பொரிஸ் ஜோன்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பாராளுமன்றத் தேர்தலை குறித்த காலப்பகுதிக்கு முன்னதாக நடாத்துவதற்கு தான் விரும்புவதாகவும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
எனினும், பொதுத் தேர்தல் நடப்பதற்கு முன்னர் ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிற்றை தடுக்கும் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கோர்பைன் வலியுறுத்தியுள்ளார்.