கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹொங்கொங்கில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், அந்த மசோதா தற்போது மீளப் பெறப்பட்டுள்ளது.
ஹொங்கொங்கில் குற்றவியல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹொங்கொங்க் நிர்வாகம் முடிவு செய்திருந்தது
இந்த சட்ட திருத்த மசோதாவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
வார இறுதியில் மட்டுமே நடந்த போராட்டங்கள், வார நாட்களிலும் நடைபெற்றதன் விளைவாக போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் வலுத்து வந்ததையடுத்து சீன ராணுவத்தின் படைப்பிரிவுகள் ஹொங்கொங் நகருக்கு அணி வகுத்தது.
இந்த படைப்பிரிவில் விமானப்படை, கடற்படை மற்றும் ராணுவம் ஆகிய முப்படைகளைச் சேர்ந்த 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வீரர்கள் போராட்டக்காரர்களை தடுக்க முற்பட்ட போதும் போராட்டக்காரர்களை தடுக்க முடியவில்லை.
இந்நிலையில் இந்த போராட்டத்தின் எதிரொலியாக, இதனை முடிவுக்கு கொண்டு வரவும், அமைதியை நிலை நாட்டவும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்த மசோதாவை மீளப் பெறுவதாக ஹொங்கொங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். #ஹொங்கொங் #கைதி #சீனா #நாடுகடத்தும் #சட்டதிருத்தம்