அரச வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இளம் பெண்களை அழைத்து தகாத முறையில் நடந்துகொண்ட அரசியல்வாதி சித்தன்கேணி இளைஞர்களிடம் கையும் மெய்யுமாக சிக்கிக்கொண்டார்.
வலிகாமம் பகுதி பிரதேச சபையின் தேசியக் கட்சியின் உறுப்பினரே இவ்வாறு பிடிபட்டார். அவர் இளைஞர்களால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது.
தேசியக் கட்சியின் தொகுதி அலுவலகம் சித்தன்கேணியில் அமைந்துள்ளது. தனியார் வீடொன்றில் இயங்கிவரும் அந்த அலுவலகத்தில் பிரதேச சபையில் வெற்றிபெற்ற அந்தக் கட்சியின் உறுப்பினர் பொறுப்பாகச் செயற்பட்டு வருகிறார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட சித்தன்கேணி இளைஞர்கள், கடந்த சில நாள்களாக கண்காணித்து வந்தனர்.
சம்பந்தப்பட்ட அரசியல்வாதிதேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் ஊடாக அரச வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பிரதேசத்தைச் சேர்ந்த பலருக்கு உறுதிமொழி வழங்கியுள்ளார். வேலை பெற்றுக்கொடுத்த இளைஞர்களிடம் சுமார் 2 லட்சம் ரூபா பணமும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் அண்மைக்காலமாக இளம் பெண்களுக்கு வேலை பெற்றுத்தருவதாக அவர்களை தமது அலுவலகத்துக்கு அழைத்து அங்க சேட்டையிலும் ஈடுபட முற்பட்டுள்ளார். அதனால் பாதிக்கப்பட்ட சிலர் சித்தன்கேணி இளைஞர்களிடம் முறையிட்டுள்ளனர்.
அதனால் அலுவலகத்தை சித்தன்கேணி இளைஞர்கள் அண்மைக்காலமாக கண்காணித்து வந்துள்ளனர். இரவு வேளையில் இளம் பெண்களை அழைத்துவரும் அந்த அரசியல்வாதி தகாத முறையில் நடந்துகொள்வது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு 19 வயது இளம் பெண்ணை அலுவலகத்துக்கு அழைத்து வந்த பிரதேச சபை உறுப்பினர், அவருடன் தகாத உறவில் ஈடுபட்ட போது, அலுவலகத்துக்குள் சென்ற இளைஞர்களிடம் சிக்கொண்டார்.
சம்பவம் தொடர்பில் உடனடியாகவே இராஜாங்க அமைச்சருக்கு சித்தன்கேணி இளைஞர்கள் அறிவித்தனர். எனினும் அவர் உரிய நடவடிக்கை எடுக்காததால், பிரதேச சபை உறுப்பினரை கடுமையாக எச்சரித்த பின் அங்கிருந்து செல்ல இளைஞர்கள் அனுமதித்தனர்.