சர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டித் தொடரில் அடுத்தடுத்து 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தியதுடன், 100 விக்கெட்டுக்கள் என்னும் மைல் கல்லைக் கடந்த முதல் வீரராக லசித் மாலிங்க வரலாற்று படைத்துள்ளார்
நியூஸிலாந்திற்கு எதிராக கண்டி பல்லேகல மைதானத்தில் நேற்றையதினம் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்தப் போட்டியில் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதனையடுத்து 126 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கெதிராக மூன்றாவது ஓவரை வீசிய லசித் மாலிங்க சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் முதலாவது ஹட்ரிக் விக்கெட் சாதனை நிகழ்த்தினார்.
தொடர்ந்து நான்காவது விக்கெட்டையும் வீழ்த்திய லசித் மாலிங்க, சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் 100 விக்கெட்கள் மைல் கல்லை கடந்த முதல் வீரராகவும் வரலாற்றில் பதிவானார்.
இந்தப் போட்டியின் இறுதியில் நியூஸிலாந்து அணி 16 ஓவர்களில் 88 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்த போதும் தொடரை 2 – 1 எனும் ஆட்டக்கணக்கில் கைப்பற்றியுள்ளது. #லசித்மாலிங்க #வரலாற்றுசாதனை