தமிழ் மக்கள் மற்றொரு எழுக தமிழுக்கு தயாராகி வருகிறார்கள். தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியிலும் எழுச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அறியமுடிகிறது. தாயகத்தில் நடக்கும் எழுக தமிழுக்கு பலம் சேர்க்கும் விதத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இதில் இணையவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு நல்ல விடயம. தமிழ் மக்கள் எந்த அளவுக்குப் பெருந்திரள் ஆகிறார்களோ அந்தளவுக்கு அழுத்தத்தை கொடுக்கலாம்.
தமிழ் மக்கள் தமது எதிர்ப்பைக் கூர்மையாகவும் கூட்டாகத் திரண்டும் காட்ட வேண்டிய ஒரு கால சந்தியில் தமிழ் அரசியல் வந்து நிற்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக யுத்தம் வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 2009க்கு முன் அது மிகவும் வெளிப்படையாக இருந்தது. ஆனால் இப்பொழுது அது மிகவும் கள்ளத்தனமான ஒரு மாய யுத்தமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது. ஆயுதப்போராட்டம் எனப்படுவது ஒரு விளைவு. காரணம் அல்ல. காரணம் எதுவென்றால் இன ஒடுக்குமுறைதான். எனவே 2009 மே மாதம் நசுக்கப்பட்டது ஒரு விளைவுதான். காரணமே அந்த விளைவை நசுக்கியது. அதற்கு அனைத்துலக சமூகம் ஒத்துழைப்பை வழங்கியது.
எனவே 2009இல் அரங்கிலிருந்து அகற்றப்பட்டது விளைவுதான். காரணம் அப்படியே இருக்கிறது. அதன்படி 2009 வரையிலும்யுத்தமானது ஆயுதப் பரிமாணம் கொண்டதாக இருந்தது. ஆனால் 2009 க்குப்பின் அது ஆயுதமற்ற வழிகளில் முன்னெடுக்கப்படுகிறது. சிங்கள பௌத்த பெருந் தேசியவாத அரசுக் கட்டமைப்பின் உபகரணங்களான திணைக்களங்களும் நிறுவனங்களும் போரை வேறு வழிகளில் தொடர்கின்றன.
எனவே ஓடுக்கு முறை தொடர்ந்தும் இருக்கிறது. இந்த ஓடுக்கு முறையானதுஆயுதப் போராட்டத்தை நசுக்கிய போது உலக சமூகம் அதற்கு ஒத்துழைப்பை வழங்கியது. ஆயுதப் போராட்டம்தான் பிரச்சினை அதை நக்கினால் ஒரு தீர்வை முன் வைப்போம் எனவே ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்கு உதவுங்கள் என்று இலங்கை அரசாங்கம் உலக சமூகத்திடம் கேட்டது. அந்த அடிப்படையிலேயே உலக சமூகம் இலங்கை அரசாங்கத்துக்கு உதவியது என்று அண்மைக்காலமாக சம்பந்தர் கூறிவருகிறார். இவ்வாறு ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்கு உதவி வழங்கிய உலக சமூகம் இப்பொழுது ஓர் அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்கும் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்று சம்பந்தர் கேட்கிறார்.
ஆயுதப்போராட்டம் ஒரு விளைவுதான் அது ஒரு காரணம்அல்ல. ஒடுக்குமுறையே மூலகாரணம். அது 2009க்கு பின்னரும் அப்படியே இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக அது எதிர்ப்பு ஏதுமின்றி யுத்தத்தை வேறு வழிகளில் முன்னெடுத்து வருகிறது. அதை எதிர்த்து கூட்டமைப்பு போராடவில்லை. ஏனைய கட்சிகளும் போதிய அளவு போராடவில்லை.
தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எல்லா கட்சிகளும் தேர்தல் மையக் கட்சிகள்தான். அவர்களிடம் ஒரு வெகுசன எழுச்சிக்கான வேலை திட்டம் எதுவும் கிடையாது. மக்கள் அரசியலை முன்னெடுப்பதற்குத் தேவையான அரசியல் தரிசனமோ திட சித்தமோ வழிவரைபடமோ நிறுவனக் கட்டமைப்போ அவர்களிடம் இல்லை. வேண்டுமானால் ஒருநாள் கர்த்தால் ஒருநாள் எழுச்சி ஒருநாள் கவனயீர்ப்பு போன்ற ஒருநாள் போராட்டங்களைத் தான் அவர்களால் நடத்த முடியும். அவற்றிலும் பல சிறுதிரள் போராட்டங்களே பெருந்திரள் போராட்டங்கள் அல்ல.
எழுகதமிழ் ஒரு பெருந்திரள் போராட்டம்.ஆனாலும் அண்மை மாதங்;களாக ஹொங்கொங்கில் நடந்து வரும் பெருந்திரள் மக்கள் எழுச்சியோடு எழுக தமிழை ஒப்பிட முடியாது.கடந்த யூன் 16ஆம் திகதி மட்டும் ஹொங்கொங்கில்சுமார் இருப்பது லட்சம் மக்கள் தெருக்களில் இறங்கினார்கள். கடந்த புதன் கிழமை அப்போராட்டம் அதன் முதற்கட்ட வெற்றியைப் பெற்றது. சர்ச்சைக்குரிய சட்டமூலத்தைப் பின் வாங்க கொங்கொங் நிர்வாகம் ஒத்துக் கொண்டது.எனினும் புதிய கோரிக்கைளை முன்வைத்துப் போராட்டம் தொடர்கிறது.
அதன் பருமன் தொடர்ச்சி வீச்சு என்பவற்றைக் கருதிக் கூறின் எழுக தமிழானது ஹொங்கொங் மக்கள் எழுச்சிக்குக் கிட்டவராது. அதுமட்டுமல்ல தமிழ் மக்கள் மத்தியில் இதுவரை நடந்த எந்த ஒரு மக்கள் எழுச்சியையும் ஹொங்கொங் மக்கள் எழுச்சியோடு ஒப்பிட முடியாது.தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கட்சிகள்; யாவும்; ஒருநாள் எழுச்சிகளையும் ஒருநாட் கடை யடைப்பையும் சிறு திரள் போராட்டங்களையும் சிறிய கவன ஈர்ப்புப் போராட்டங்களையும் ஒழுங்கு செய்யத்தக்க வரையறுக்கப்பட்ட பலத்தைக் கொண்டவைதான்.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் தொடர்ச்சியானது ஆனால் அது பெரிய தாக்கத்தை ஏட்படுத்தவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் இப்பொழுது 900 நாட்களை கடந்து விட்டது. தமது காணிகளைக் கேட்டு கேப்பாபுலவில் மக்கள் தொடர்ந்து போராடுகிறார்கள்.அப்போராட்டம் ஏறக்குறைய சோர்ந்து விட்டது. பல மாதங்களுக்கு முன்பு மன்னாரில் முள்ளிக்குளத்தில் தமது காணிகளையும் வீடுகளையும் கேட்டு மக்கள் போராடினார்கள். ஆனால் அவர்களுடைய சில காணிகளும் சில வீடுகளுமே விடுவிக்கப்பட்டன. ஏனையவை விடுவிக்கப்படவில்லை. அந்த மக்களின் போராட்டத்தைப்பற்றி இப்பொழுது யாரும் கதைப்பதில்லை.
அரசியல் கைதிகளின் விடயத்திலும் அப்படித்தான்.கைதிகள்தங்கள் பாட்டில் உண்ணாவிரதம் இருக்க தொடங்குவார்கள். கைதிகளுக்காக வழமையாக போராடிவரும்ஒர் அங்கிலிக்கன் மதகுரு அரங்கில் இறங்ங்குவார் அவர் வடக்கு-கிழக்குக்கு வந்து இங்கு உள்ள மக்கள் அமைப்புகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்து அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டங்களை ஒருங்கிணைப்பார். ஒரு கட்டத்தில் இதில் பல்கலைக்கழகமும் இணையும். போராட்டம் எழுச்சியுறும். ஆனால் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி போராட்டம் முடித்து வைக்கப்படும். எந்த ஒரு கைதியும் விடுவிக்கப் படுவதில்லை. இப்படித்தான் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
அண்மையில் கூட ஒரு கைதி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.அமைச்சர் மனோகனேசன் அதில் தலையிட்டார். அரசியல் கைதிகள் தொடர்பாக அமைச்சரவைப் பத்திரத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப் போவதாக கூறினார். ஆனால் இன்று வரையிலும் அப்படி எதுவும் நடக்கவில்லை. இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவின் உறவினருக்கு சொந்தமான தமிழ் மிரர் பத்திரிகை அதன் ஆசிரியர் தலையங்கத்தில் எழுதியிருந்தது.மனோ கணேசன் வாக்குறுதி அளித்த அமைச்சரவை பத்திரம் என்னவாயிற்று என்று ஆசிரியர் தலையங்கம் கேள்வி எழுப்பி இருந்தது. அதற்கு மனோ கணேசன் முகநூலில் பதில் கூறினார். இதுபோன்ற விடயங்களில் அமைச்சரவை பத்திரத்தை நகர்த்துவதில் உள்ள இடர்களை அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். எடுத்த எடுப்பில் அப்படி ஒர் அமைச்சரவை பத்திரத்திற்கு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களை சம்மதிக்கச் செய்ய முடியாது என்று தொனிப்;பட அவருடைய பதில் அமைந்திருந்தது. எனினும் இன்று வரையிலும் கைதிகளுக்கு தீர்வில்லை.
இதுதான் நிலைமை. கடந்த பத்தாண்டுகளாக தமிழ்மக்களின் எந்த ஒரு போராட்டத்துக்கும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. இப்போராட்டங்களில் அதிகம் அக்கறை கொள்ளாத அல்லது இப்போராட்டக் களங்களில்அதிகம் காணப்படாத கூட்டமைப்பின் உயர் மட்டத்தலைவர்கள் இப்போராட்டங்கள் எல்லாவற்றையும்விட ஓர் அரசியல் தீர்வு பிரதானமானது என்பது போல நடந்துகொண்டார்கள். தீர்வை நோக்கி அவர்களுடைய கவனம் முழுதும் குவிக்கப்பட்டிருந்தது போல காட்டிக் கொண்டார்கள். தீர்வுக்காக அவர்கள் தமது சொந்த வாக்காளர்களுக்கு புரட்டிப் புரட்டி கதைத்தார்கள். ஒவ்வொரு பண்டிகை நாளின் போதும் அடுத்த பண்டிகைக்கு தீர்வு கிடைக்கும் என்று ஓர் ஆவிக்குரிய சபையின் போதகரை போல சம்பந்தர் வாக்குறுதி வழங்கினார். ஆனால் தீர்வு திட்டம் கடந்த ஒக்டோபர் மாதம் நிகழ்ந்த ஆட்சி குழப்பத்தோடு இறுகி நின்று விட்டது.
இப்படிப்பட்ட பரிதாபகரமான அரசியல் சூழலில் தமிழ் மக்கள் நமது தேசிய இருப்பை பாதுகாப்பதற்காகவும் ஆயுதப் போரின் விளைவாக வந்த பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காகவும் அதேசமயம் இனப்பிரச்சினைக்கான பொருத்தமான ஒரு தீர்வை பெற்றுக் கொள்வதற்காகவும் கேந்திர முக்கியத்துவம் மிக்க தமது வாக்குகளை பொருத்தமான விதத்தில் பிரயோகிப்பதற்காகவும்ஒன்று திரள வேண்டியிருக்கிறது,போராட வேண்டியிருக்கிறது.அவர்கள் யாருக்கு வாக்களித்தார்களோ அவர்கள் போராட மாட்டார்கள். கூட்டமைப்பு பிழை விடுகிறது என்று கூறுபவர்களும் தேர்தல் மைய அரசியல்வாதிகள்தான். அவர்களிடமும் ஒரு பெருந்திரள் வெகுஜன எழுச்சிக்குரிய வேலைத் திட்டங்கள் எதுவும் கிடையாது.
இப்படியொரு வெற்றிடத்தில்தான் தமிழ் மக்கள் பேரவையின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. ஆனால் பேரவை கட்சிகள் மீதும் சனங்கள் மீதம் செல்வாக்குச் செலுத்தும் ஓரமைப்பாகத் தொடர்ந்துமுள்ளதா என்ற சந்தேகங்கள் அதிகரித்து வருகின்றன.அதற்குள் காணப்பட்ட கட்சிகள் பல திசைகளிலும் சிதறி போய்விட்டன. இனிமேலாவது அதை அதன் மெய்யான பொருளில் ஒரு மக்கள் இயக்கமாக கட்டியெழுப்ப வேண்டும் என்று ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். ஆனால் பேரவையை விக்னேஸ்வரன் மைய அமைப்பாகத் தொடர்ந்தும் வைத்திருக்க விரும்பும் தரப்பினர் பேரவைக்குள் புதிய மாற்றங்களைச் செய்வதற்கு தடையாக காணப்படுகிறார்கள். இப்படிப்பட்ட குழப்பங்களின் மத்தியில்தான் எழுக தமிழுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. பேரவை ஒப்பீட்டளவில் பலவீனமாக காணப்படும் ஒரு காலகட்டத்தில் இந்த அழைப்பு வந்திருக்கிறது.
அதேசமயம் இப்படி ஒரு மக்கள் எழுச்சியை குறைந்தது ஒரு நாள் மக்கள் எழுச்சியையாவது நிகழ்த்திக் காட்ட வேண்டிய ஒரு கட்டாயம் தமிழ் மக்களுக்கு உண்டு. கடந்த பத்தாண்டுகளாக போரை வேறு வழிகளில் தொடரும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை அம்பலப்படுத்தவும் எதிர்க்கவும் இது அவசியம்.
ஆயுதப்போராட்டத்தை ஒரு தடையாக பார்த்த உலக சமூகத்துக்கு ஒடுக்குமுறைதான் தடை என்ற ஒரு செய்தியை கொடுக்க வேண்டும்.யுத்தம் வேறு வழிகளில் எதிர்பேதுமின்றி ஒருதலைப் பட்சமாக முன்னெடுக்கப்பட்டுவருவதை எடுத்துக் காட்ட வேண்டும்.
நிலைமாறுகால நீதியை ஒரு தீர்வாக முன்மொழிந்த ஐ.நா.வுக்கும் அதை இப்பொழுதும் ஆதரிக்கும் நாடுகளுக்கும் தமது ஏமாற்றத்தையும் விரக்தியையும் வெறுப்பையும் தமிழ்மக்கள் கூர்மையாக வெளிக்காட்ட வேண்டும்.
இந்த ஆண்டின் இறுதியில் ஒரு ஜனாதிபதி தேர்தல் வரவிருக்கிறது. தமிழ் மக்கள்கேந்திர முக்கியத்துவம் மிக்க வாக்குகளை பெற்றவர்கள். அந்த வாக்குகளை எப்படித் தீர்க்கதரிசனமாக பாவிப்பது என்பதைக் குறித்து மூலோபாய ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் தமிழ் மக்கள் முடிவு எடுக்க வேண்டும். அதற்கு முதலில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பொருத்தமான கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் ஒன்றிணைய வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கருத்துருவாக்கிகளும் புத்திஜீவிகளும் இது விடயத்தில் ஆர்வமுடைய அனைவரும் ஒன்று திரள வேண்டும்.
இவர்களை எல்லாம் ஒன்று திரட்டும் ஓர் இடை ஊடாட்டத் தளமாக தமிழ் மக்கள் பேரவை செயற்படவேண்டும்.எல்லாத் தமிழ் மாவட்டங்களையும் எல்லாத் தமிழச்; சிவில் அமைப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்டமைப்பு மாற்றத்துக்குப் பேரவை உள்ளாக வேண்டும். அதற்கொரு யாப்பு வேண்டும். புதியநிலைமைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட வடிவங்களை கண்டுபிடிப்பதற்கான உரையாடல்களைப் பேரவை தொடங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் அடுத்த கட்டம் எதுவென்று தெரியாமல் தேங்கி நிற்பதற்கு ஒரு மக்கள் இயக்கமாகப் பேரவையும் பொறுப்புத்தான்.ஏற்கனவே தேங்கிப் போயிருக்கும் போராட்டங்களை எப்படி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தலாம் என்பதைக் குறித்து பேரவையும் ஏனைய கட்சிகளும் அமைப்புகளும் சிந்திக்க வேண்டும். இப்போதிருக்கும் பேரவை மேற்கண்ட உரையாடல்களுக்கு பொருத்தமானதாக இல்லை என்றால் அது தன்னை அடுத்த கட்டக் கூர்ப்பிற்குத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.ஒரு யாப்பு முன்மொழிவைத் தயாரிப்பதை விடவும் கடினமான பணி இது.
இப்போதுள்ள அரசியல் சூழலில் தமிழ் மக்களுக்கு எழுக தமிழ் வேண்டும். ஒரு எழுக தமிழ் மட்டும் போதாது. பல எழுக தமிழ்கள் வேண்டும். அதுவும் தொடர்ச்சியாக வேண்டும். ஹொங்கொங்கில் நடப்பதைப் போல அது ஒரு தொடர் மக்கள் எழுச்சியாக அமைய வேண்டும்.தமிழ் மக்கள் பேரவையும் வேண்டும். அது தமிழ்க் கட்சிகளின் மீதும் தமிழ் மக்கள் மீதும் தார்மீகத் தலையீட்டைச் செய்யக் கூடிய ஒரு வளர்ச்சியைப் பெற வேண்டும்.ஏனெனில் இனிவரப்போவது தேர்தல்களின் காலம்.