வடமாகாண வீதிபாதுகாப்பு வாரம் எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சாலை பாதுகாப்பு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு தொடர்பிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (17) இடம்பெற்றது.
அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக வீதி பாதுகாப்பு வாரத்தின் மூலம் நடைமுறைப்படுத்தக்கூடிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது வடமாகாணம் முழுவதும் பல்வேறு மட்டங்களில் வீதிப் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு செயற்பாடுகளை மேற்கொள்ளல். பாடசாலைகளில் மாணவ போக்குவரத்து பிரிவினை ஸ்தாபித்தல், சிறந்த வாகன ஓட்டுனர்களை தெரிவு செய்து அவர்களை கௌரவித்தல். விபத்துக்கள் குறைந்த காவல் நிலையங்களை தெரிவு செய்தல் மற்றும் வடமாகாணத்தில் விபத்துக்கள் அதிகமான இடங்களை இனங்கண்டு அவ்விடங்களில் போக்குவரத்து காவல்துறையினரின் மாதிரிகளை காட்சிப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் வீதி பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், வடமாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் , வீதி அபிவிருத்தி திணைக்களத்தலைவர் , மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் , வடமாகாண சிரேஷ்ட காவல்துறைமா அதிபர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். #வடமாகாண #வீதிபாதுகாப்பு #வாரம் #ஆரம்பம் #சுரேன்ராகவன்