இலங்கையில் இருந்து மண்டபம் அருகே வேதாளய் பகுதிக்கு நேற்று காலை தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் வளைகுடா கடற்பகுதியின் சுங்க அதிகாரிகள், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு, கடலோர காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர தேடலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வேதாளைப்பகுதிக்கு 7 கிலோ கிராம் தங்கத்தை காரில் கடத்திக்கொண்டு சென்ற நபர்களை அதிகாரிகள் பின் தொடர்ந்து திருப்புவனம் அருகே கைது செய்தனர். அத்தோடு கைது செய்யப்ட்ட நபர்களிடம் இருந்து 4 கோடி ரூபா பெறுமதியான 7 கிலோகிராம் தங்க பிஸ்கட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு கடத்தில் ஈடுபட்ட மதுரை மற்றும் சென்னையை சேர்ந்த நபர்களை மதுரையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன் தீவிர விசாரணைகளையும் மேற்கொண்டனர்.
குறித்த விசாரணையின் போது இலங்கையில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக தமிழகத்திற்கு தங்கத்தை கடத்தி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்தோடு கடந்த 2017 ஆம் ஆண்டு மற்றும் 2018 ஆம் ஆண்டு குறித்த எல்லை வழியாக பாரிய தொகை தங்கம் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.