முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெளத்த மதகுருவின் பூதவுடைலை தகனம் செய்வதற்கு நீதிமன்றம் தடை ஏற்கனவே விதித்திருந்தது. அத்துடன், தேரரின் உடலை ஆலயத்திற்கு அண்மையிலுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவினை மீறி ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் தற்போது தகனம் செய்யப்பட்டதுடன், ஆலய வளாகத்தில் பௌத்த தேரரின் உடலை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு குழுமியிருந்த தமிழ் மக்கள் மீது காவற்துறையினர் தாக்குதல் தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிக்குவின் உடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு உத்தரவு..
நீராவியடி விகாரையின் பெளத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்த விகாரையின் விகாராதிபதி கொலம்ப மேதாலங்க தேரர் கடந்த 21 ஆம் திகதி புற்றுநோயினால் மஹரகம வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
இவரது உடலை முல்லைத்தீவு குறித்த ஆலய வளாகத்தில் தகன கிரியைகள் மேற்கொள்வதற்கு ஆலய வளாகத்தில் எதிர்ப்பு தெரிவித்து காவற்துறையினர் ஊடாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு வழங்கியிருந்தது.
இந்நிலையில் இன்று காலை குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைகாக பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் நீதிமன்றுக்கு சென்றிருந்தனர்.
வழக்கு விசாரணைகாக சிங்கள சட்டதரணிகள் பெருமளவானோர் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்ததுடன் ஆலய நிர்வாகம் சார்ப்பில் சிரேஸ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம், மணிவண்ணன், சுகாஸ் உள்ளிட்டவர்கள் முன்னிலையாகி இருந்தனர்.