இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது, காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க அந்த நாடு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்க வெளிநாடுகள் மறுத்தன.
இதனைத் தொடர்ந்து காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பிடம் பேசினார். இதை போல பிரதமர் மோடியும் பேசினார்.
இதனைத் தொடர்ந்து காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் 2 முறை அறிவித்து இருந்தார். இதனை இந்தியா நிராகரித்து இருந்தது. காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நாடு தலையிடுவதை விரும்பவில்லை என்று அறிவித்தது.
இந்த நிலையில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க ஜனாதாதி டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் நியூயார்க் சென்றுள்ளார். அப்போது இம்ரான்கான் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தார். “காஷ்மீர் விவகாரம் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து இருப்பதால் வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு இதில் தலையிட வேண்டிய பொறுப்பு உள்ளது” என டிரம்பிடம் இம்ரான்கான் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த டிரம்ப் “காஷ்மீர் விவகாரத்தில் தாம் நிச்சயம் உதவ தயாராக இருப்பதாகவும், அதே சமயம் இந்தியாவும் இதற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே மத்தியஸ்தம் செய்ய முடியும்“ என்றும் கூறியுள்ளார்.
பின்னர் டொனால்டு டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய பிரதமர் மோடியுடனும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடனும் நான் நல்ல நட்புறவுடன் இருக்கிறேன். இதனால் காஷ்மீர் விவகாரத்தில் என்னால் நிச்சயம் நல்ல மத்தியஸ்தராக இருக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.