154
உலகச் சுற்றுலாப் பயணிகளின் முன்னோடி அறிஞரான தொமஸ் குக் மூலம் இந்த நிறுவனம் 1881 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 1896-ல் முதன்முதலாக ஏதென்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான பயணிகள் ஏமுகவர் நிறுவனமாக இந்நிறுவனம் அதிகாரபூர்வ நியமனம் பெற்றது. தொமஸ் குக் முதன்முதலாக 1927-ல்தான் தனது விமானப் பயணத்தை தொடங்கியது. சிகாகோவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிக்கு நியூயார்க்கிலிருந்து 6 பேரை அழைத்துச் சென்று விடுதியில் தங்கவைத்து பத்திரமாக திரும்ப அழைத்து வந்தது.
இதனை அடுத்து பயண ஏற்பாட்டில் மிக முக்கியமான ஒரு இடத்தை இந்நிறுவனம் பிடித்தது. அதனைத் தொடர்ந்து நேற்றுவரை இந்நிறுவனம் உலகின் மிகப்பெரிய சுற்றுலாப் பயண நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது. ரோயல் பாங்க் ஒவ் ஸ்கொட்லாந்து உள்ளிட்ட பல வங்கிகள் கடனைப் பெற்று மிகப்பெரிய அளவில் தனது நிறுவனத்தை விரிவுபடுத்தியது. ஆனால் தற்போது உடனடியாக கடனை திருப்பிக்கட்ட வங்கிகள் வற்புறுத்தியதை அடுத்து ஏராளமான கடன் பிரச்சினையால் தத்தளித்து வந்தது.
கடனை அடைக்க பல்வேறு இடங்களில் நிதித் திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும் போதிய அளவுக்கு நிதி சேராத நிலையில் கடன்காரர்களுக்கு பதில்சொல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலையில் நேற்று திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தொமஸ் குக் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உலகெங்கும் சென்றுள்ள 1,50,000 பயணிகள் வீடு திரும்புவது தற்போது சிக்கலாகியுள்ளது. அது மட்டுமின்றி அதன் ஏராளமான நிர்வாக அலுவலகங்களும் மூடப்படுகின்றன. இங்கிலாந்தில் மட்டும் 600 பயண ஏற்பாட்டு அலுவலகங்களைக்கொண்ட இந்த சுற்றுலா நிறுவனத்தில் மொத்தம் 21 ஆயிரம் பேர் பணியாற்றி வந்தனர். இவர்களின் நிலையும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பீட்டர் ஃபங்க்ஹவுசர் திங்கள்கிழமை காலை நிறுவனத்தின் அலுவலகங்களுக்கு வெளியே படித்த அறிக்கையில், பணி நிறுத்தம் குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.
இது குறித்து தொமஸ் குக் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், நிறுவனத்தை மீட்க கணிசமான முயற்சிகள் இருந்தபோதிலும், பங்குதாரர்களுக்கும் புதிய பண வழங்குநர்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. எனவே நிறுவனத்தின் தலைமை ஆணையம், உடனடியாக நிறுவனத்தை கலைப்பதை தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தொமஸ் குக் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரரான சீனாவின் ஃபோசுன் குழு, நிறுவனத்தை திவால் நிலையிலிருந்து காப்பாற்றும் முயற்சிகள் தோல்வியடைந்தது தொடர்பாக வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியது.
உலகளவில் பழமையான நிறுவனம் திவாலாகிவிட்டதால், உலகளவில் 21,000 ஊழியர்களில் 9,000 இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர். இதனையடுத்து, நிறுவனத்தின் அனைத்து விமான பயணங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தொமஸ்குக் விமானத்தில் நாடு திரும்ப திட்டமிட்டு இருந்த சுமார் 1,50,000 பேர் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிறுவனம் திவாலான நிலையில், இங்கிலாந்தில் சிவில் ஏவியேஷன் ஆணையமும், அரசாங்கமும் தொமஸ் குக் பயணிகளை புதிய விமானங்கள் மூலம் நாடு திரும்ப ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், பிரித்தானியாவில் இருந்த தொமஸ் குக் விமானத்தின் மூலம் பயணிக்க திட்டமிட்டிருந்த பயணிகள், வீட்டிலே இருக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்போது உலகெங்கிலும் உள்ள ரிசார்ட்டுகளில் சிக்கித் தவிக்கும் நிறுவனத்தின் 400,000 வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பலர் ரிசார்ட் நிர்வாகத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Spread the love